நினைவுத் தடங்களில்… ![]()
S.G.சாந்தன் அண்ணா ![]()
முதன் முதலில் 1991/92 காலத்தில் நீர்வேலி கதிர்காம முருகன் கோவிலில் நடந்த இசைக்குழுவில் “ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே…” என்ற பாடலை பாடும்போது நேரில் பார்த்தது. “ஆழக்கடல் எங்கும்…” என்ற பாடல் அந்த நேரத்தில் மிக பிரபலம். அந்த கணீர் குரல் மனதில் பதிந்ததுடன் பிடித்தும் போனது.
யாழ் இடப்பெயர்வுக்கு பின்னரான (1996இன் பின்னரான) காலம். வன்னி நிலம் பொருளாதார தடைக்கு உட்பட்டு இருந்த மிகவும் இக்கட்டான நேரம். பாடசாலை பருவத்தில் புதுக்குடியிருப்பு மாலதி அரங்கில் இசைக்குழுவாம் என்று அறிந்தால் அதுவே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். உரிய நாளில் தவறவிடாமல் 12 கிலோமீற்றருக்கும் மேல் துவிச்சக்கர வண்டி மிதித்து சென்று விடுவோம். நள்ளிரவில் இசைக்குழு நிறைவடைய மீண்டும் 12 கிலோமீற்றர் துவிச்சக்கர வண்டி மிதித்து வந்து தூங்க போக இரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும்.
அந்தளவிற்கு ஈர்ப்பு ஏற்பட காரணம் எமது தாயக பாடகர்களும் இசையமைப்பாளர்களும் இசைக்கலைஞர்களும் தான். அதிலும் S.G.சாந்தன் அண்ணாவுடன் சுகுமார் அண்ணா இணைந்து பாடும் பாடல்கள் தனி ரகம். சாந்தன் அண்ணாவின் குரலில் அப்படி ஒரு பிடிப்பு. ஆனால் அந்த நேரம் அவருடன் கதைத்து பழகியதில்லை.
பின்னர் காலங்கள் மாறி 2003 சமாதான பேச்சுவார்த்தை நேரம்…
காலத்தின் மாற்றத்துடன் காட்சிகளும் மாறியிருந்தது. சில கடமைகள் ரீதியாக நேரடியாக சாந்தன் அண்ணாவுடன் கதைக்க சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. அந்த அறிமுகத்தின் பின்னர் வீதிகளில் காணும் இடங்களில் ஒரு புன்சிரிப்புடன் தலையசைக்க தவறுவதில்லை.
2009 போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம். ஏப்ரல் மாதம் இறுதிக்கு அண்மையான நாட்கள். முள்ளிவாய்க்கால் ஒற்றைப்பனையடி மற்றும் சாளம்பன் பகுதியில் இருந்தும் மக்கள் காளியம்மா கோவில் தாண்டி கப்பலடி பக்கமாக நகர்ந்து செல்ல தொடங்கிய நேரம் அது. ஒற்றைப்பனையடி – சாளம்பன் பகுதிகளில் மோசமாக எறிகணைகள் வீழ்ந்துகொண்டிருந்தன. நில அமைவில் ஒற்றைப்பனையடி உயர்ந்த பிரதேசம் என்பதால் அங்கிருந்து சன்னங்கள் சாளம்பன் பகுதி நோக்கி அதிகமாக வரத்தொடங்கியிருந்த பொழுதில் ஒரு நாள். அவசரமாக ஒரு உழவியந்திர பெட்டியின் டயர் தேவையாக இருந்தது. மக்களிடம் இருந்து வாங்க கூடாது என்பது இறுக்கமான கட்டளை. மக்கள் இல்லாத சூனிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள உழவியந்திரங்களில் எங்காவது எறிகணை விழாமல் தப்பி நல்ல நிலையில் உள்ள டயரை தேடி சென்றுகொண்டிருந்த ஒரு நண்பகல் பொழுது. சாளம்பன் உள் வீதியில் சுடுகாட்டில் இருந்து கடற்கரை பக்கமாக செல்லும் கிரவல் வீதியில் சில நூறு மீற்றர் தூரத்தில் வீதியின் ஓரமாக ஒரு பனிச்சை, பாலை மரங்களின் நிழலில் சரித்து விடப்பட்டிருந்த ஒரு பரலின் மீது ஒருவர் தலையில் ஒரு துண்டால் மூடியவாறு அமர்ந்திருந்தார். அந்த பகுதியில் இருந்த மக்கள் கப்பலடி பக்கமாக சென்றிருந்த நிலையில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் யாராக இருக்கும்? எதற்காக இருக்கிறார்? என்ற சிந்தனைகளுடன் அருகில் சென்ற போது அது சாந்தன் அண்ணா என்று தெரிந்தது. வழமையாக எப்போதும் சவரம் செய்திருக்கும் முகத்தில் இலேசாக தாடி வளர்ந்திருந்தது. அவர் அமர்ந்திருந்த பரல் மேல் பகுதியில் வெட்டி அடுப்பாக செய்யப்பட்டிருந்தது.
என்ன அண்ணா இதில இருக்கிறீங்கள்?
இதிலதான் இருந்தனாங்கள். செல்லடி கூடி சனம் எழும்ப வீட்டுக்காரரையும் கப்பலடிக்கு கிட்டவா ஒரு இடத்தில கொண்டு போய் விட்டிட்டன். இந்த பரல் அடுப்பையும் ரொட்டி தட்டையும் உருட்டிக்கொண்டு போக வேணும். அங்கால செல் விழுகுது. அதுதான் யோசித்து கொண்டு இருக்கிறன்.
கொஞ்சம் பொறுங்கோ. எங்கட ஒரு ரக்டர் கிட்டத்தான் நிக்குது. பார்ப்பம்.
அந்த பகுதிக்குள் செல் கடுமையாக வீழ்ந்து கொண்டு இருந்ததால் உழவியந்திரத்தை கொண்டு செல்வது ஆபத்தானதாக இருந்தது. காளியம்மா கோவிலடிக்கு அண்மையாக இருந்த வீரத்தேவன் அண்ணாவிடம் விடயத்தை சொல்லி உழவியந்திரத்தை கொண்டு செல்ல அனுமதி கேட்டபோது, “செல்லடி குறைய ரைவர் ஐயாட்ட சொல்லி கொண்டுபோம். ரக்டர் பெட்டிக்குள்ள யாரும் நிண்டு போக வேண்டாம். கவனம்.” என்று அனுமதித்தார்.
எறிகணைகள் வீழ்வது குறைந்த நேரத்தில் உழவியந்திரத்தை கொண்டு சென்று அந்த அடுப்பு பரலை ஏற்றி விட்டு, “அண்ணா நீங்களும் இந்த ரக்டரிலையே போங்கோ. பெட்டிக்கு மேல தலை தெரியிறபோல இருக்காதங்கோ. கவனம்.” என்று கூற, “ஓமோம். நன்றி. நீங்கள் பார்த்து போங்கோ. அங்காலதான் இப்ப செல் கூட விழுகுது.” என்று கூறிவிட்டு டக்டரில் ஏறினார்.
அதுதான் இறுதியான சந்திப்பாகவும் அமைந்தது. சாந்தன் அண்ணா விடுதலையாகி வந்த பின்னரும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி அறிந்த போதும் அது அவருக்கு உயிராபத்தான நிலையாக மாறும் என எண்ணவில்லை. மீண்டு வருவார் என்றே எண்ணினேன். அது பொய்யாகி போனது.
இப்போது கூட அவரது குரலில் ஒலிக்கும் தாயகப் பாடல்களை கேட்கும் போது எழும் உணர்வலைகளை எழுத்தில் வடிக்க இயலாது. உணர மட்டுமே முடியும். அவரது குரலுக்கும் அவரது பாணிக்கும் பதீலீடு இருக்கவே முடியாது. அவர் எமது தேசத்தின் குயில்.
𝓐𝓶𝓪𝓻𝓷𝓪𝓽𝓱.𝓚.𝓚 (𝓐𝓐𝓛)
