சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்களிற்கு
“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு
தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிவரை தமிழீழ விடுதலைக்காய்ப் பணியாற்றிய சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 12.06.2026 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது.
இவர், 1980 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து, கனடா நாட்டில் வாழ்ந்துவந்தவராவார். அக்காலப்பகுதியிலிருந்து, தமிழீழம் நோக்கிய பணிகளை முன்னெடுக்கவென உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் பலவற்றில் தலைவராகவும் ஆலோசகராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து, அந்த கட்டமைப்புகளூடாக தனது பணிகளைத் திறம்படச் செயற்படுத்தியவராவார். தாயகத்தில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர், குமுகாய நலன் சார்ந்த பணிகளைத் தன்னலமற்ற தூரநோக்குச் சிந்தனையுடன் செய்தவராவார்.
சிறந்த பேச்சாளராகவும் நேர்மையான குமுகாயப் பணியாளராகவும் தமிழ் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந்த இவர், தனித்துவமான ஆளுமை வெளிப்பாட்டினால் பல விருதுகளைத் தனதாக்கிய மதிப்பிற்குரியவராவார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப் பலம் சேர்க்கும் செயற்பாடுகளில், நீண்டகாலமாக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட செயற்பாட்டாளராவார். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுதல்கொண்டு, போராட்டத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் தனது இறுதிமூச்சு வரை, தன்னை அர்ப்பணித்துத் தேசவிடுதலைக்காக மிகப்பெரும் பலம் சேர்த்த இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் தேசவிடுதலைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

