சிங்கள இராணுவ நடவடிக்கை தமிழ் இனப்பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கவில்லை. கொழும்பில் உள்ளூர் அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. தென்பகுதியில் போர் ஆயத்தங்களின் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் ஜனாதிபதிப் பதவியை அகற்றப் போவதாக தேர்தல் காலத்தில் பகிரங்கமாக கூறிய போதிலும், சகல வல்லமை பொருந்திய அப் பதவியை விட்டுவிட ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு மனம் ஒப்பவில்லை. ஜூலை 15ம் திகதிக்குள் அதனைச் செய்வதான காலக்கெடு நெருங்கிவந்து கொண்டிருந்தது. எனவே இப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவும், இராணுவ வெற்றி ஒன்றுடன் ஏனைய பிரச்சினைகளைச் சமாளித்து தனது அரசியல் நிலையைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஜனாதிபதி சந்திரிக்கா விரும்பினார். எனவே தான் உக்ரேனிலிருந்து வருவதாக இருந்த AN – 32 துருப்புக்காகவும் விமானங்கள் போன்ற இராணுவத் தளபாடங்கள் முழுமையாகா வந்திறங்கும் முன்னரே இராணுவ நடவடிக்கையைத் தொடங்க அரசாங்கம் விரும்பியது. எனவே தான் “இந்தியா டுடே”க்கு அளித்த பெட்டியில் சந்திரிக்கா கூறியிருந்தது போன்று, “ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்படும். அப் பகுதியே துடைத்தழிக்கப்படும்” என்று தெரிந்தும் இராணுவ நடவடிக்கையை அவர் அவசரப்படுத்தித் தொடங்கினார். இத்தகையதொரு இராணுவ நடவடிக்கை குடாநாட்டின் மீது ஆரம்பமாகப் போவது. மேற்கூறிய உள்ளூர் அரசியல் நோக்குக் காரணமாக ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. எந்தத் திகதி என்பது தான் தெரியாது இருந்தது. எனவே இதனை எதிர்கொள்ள புதிய போராளிகள் ஏராளமானோரைச் சேர்த்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தையும், சர்ந்தர்ப்பத்தையும் விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்தது. மேலும் மண்டைதீவு மீதான முன் எச்சரிக்கையான தாக்குதல், அரசாங்கத்தின் இராணுவ தந்திரோபாயத்தில் பெரும் ஒரு அடியாகவும், ஓட்டையாகவும் அமைந்தது. எனவே, இராணுவம் பலாலியிலிருந்து பெரும் படை நகர்வை, கிடுக்கி போன்ற வடிவமைப்பில் (pincer movemenr) நடத்த வேண்டியிருந்தது. மண்டைதீவில் இருந்தோ ஏனைய முகாம்களில் இருந்தோ ஒரே நேரத்தில் புறப்படும் கடந்த கால நடவடிக்கை, இம் முறை கைக்கொள்ளப்படாது, பலாலியிலிருந்து பெரும்படை நகர்வை திட்டமிட்ட ரீதியில் வழிநடத்துவது என்ற நோக்கத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். இங்கு தான் இப்படை எடுப்பின் தோல்விக்கான பலவீனம் இருந்தது. அப்பலவீனத்தை தேசியத் தலைவர் மிக நுட்பமகா, அவகாசமாக பயன்படுத்திக் கொண்டதே, போர் நடவடிக்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அது சிறீலங்காவின் “முன்னோக்கிப் பாய்தல்” என்ற தாக்குதல் நடவடிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளின் “புலிப்பாய்ச்சல்” என்ற தாக்குதல் நடவடிக்கைக்கு வழிவகுத்தது

