பீரங்கிப் படையணியால் ஆனந்தபுரத்தை அதிரவைத்த பிரிகேடியர் மணிவண்ணன்!
தமிழீழ மண் ஆக்கிரமிக்கப்படுவதைக் கண்டு, கொதித்தெழுந்து தமிழ் மண் காத்திடத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார் மணிவண்ணன் அவர்கள்.இவர் பயிற்சிகளை முடித்து விடுதலைப் போராட்டப் பணிகளைத் தொடர்ந்தார்.தொடக்க காலத்திலேயே தளபதி கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பணியை தன்னகத்தே ஏற்று அர்ப்பணிப்போடு பணிகளை முன்னெடுத்தார். தொழிநுட்பத்துறை சார்ந்த பணிகளோடு ஏனைய பணிகளையும் ஆற்றிவந்தார்.
தளபதி கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்குப் பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாகத் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயற்பாட்டுக் காலப்பகுதியில் பல முக்கிய தாக்குதல்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதோடு, பெரும் இழப்புகளையும் சிங்களப்படைகள் சந்தித்திருந்தது.தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்த சிறிலங்கா அரச படைகள் , தம்முடைய நகர்வுகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடியது. கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் துல்லியமான தாக்குதல்கள் சிறிலங்காப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்ககது.
பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் ,சிறிலங்கா அரச படைகள் திட்டமிட்டு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கெதிரான முறியடிப்புத் தாக்குதல்கள்,வலிந்து தாக்குதல்கள் என, தளபதி பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்டவையாகும்.இக்காலப்பகுதிகளில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது மட்டுமன்றி தொடர்ந்தும் இராணுவ முகாங்களைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறியது என்பதும் உண்மையே.
அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூட்டின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இராவத்தின் மனோநிலைகளை தகர்த்து போராளிகளின் மனோ வலிமையை அதிகரித்து, விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்தியம் மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான்.கேணல் கிட்டு பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் கட்டளைக்கு அமைவாக சவால்கள் நிறைந்த களமுனைகளை எதிர்கொண்டு,மிக வேகமாக ஆட்லறிகளை இடம் நகர்த்தி அவற்றைப் பாதுகாத்து வந்தமையானது நாளாந்த போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது.
தமிழீழ மண்ணை ஆக்கிரமிக்க முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் படைவலிவையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த சூழலில் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சுற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்தன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்தினரின் மீது நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு,படைகளுக்குத் திகைப்பையும் பெரும் அழிவையும் கொடுத்தன.
2009 இல் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வன்வளைப்பிற்கு உட்படுகிறது,கடுமையான தொடர் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.முன்னேறிவரும் இராணுவத்திற்கெதிராக பீரங்கிப் படையணி செறிவான சூட்டை வழங்கிக் கொண்டிருந்தது.
அந்நெருக்கடியான சூழலில் உடனடியாக ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி ,சிங்களப் படைகள் சிதறி ஓடுமளவிற்கு நேரடியான தாக்குதல்களை படையினர் மீது மேற்கொள்ளப்பட்டது.தாக்குதலில் ஈடுபட்டிருந்த சிங்களப் படையணிகள் முன்னேற மறுக்கின்றன. அந்தளவிற்கு பாரிய இழப்புக்களை சிறிலங்காப் படைகள் ஆனந்தபுர மண்ணில் சந்தித்தன.களத்தில் நின்ற போராளிகளின் தீரமிகு தாக்குதல்களும் மோட்டார் பீரங்கிப் படையணிகளின் செறிவுடன் கூடிய துல்லியமான தாக்குதல்களும் பாரிய அழிவினைச் சிங்களப் படைகளுக்கு
ஏற்படுத்திய வண்ணம் இருந்தன.
பெரும் போர் நடந்து கொண்டிருந்த,அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
அந்தக் களமுனையிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகள் பலர் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.ஆட்லறிப் பீரங்கிகள் துப்பாக்கிகள் போன்று, சிங்களப் படைகளின் நிலைகளையும் முன்னேறும் படைகளையும் தாக்கியளித்துக் கொண்டிருந்தது.அவ்வாறு வரலாறு படைத்த ஆனந்தபுர மண்ணிலே கட்டளை வழங்கியபடியே, பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் உடலில் குண்டேந்தி மாவீரனாக வீரவரலாறானார்.
இந்த வரலாற்றுப் போரில் பல தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்கள்.
அவர்கள் காட்டிச்சென்ற வரலாற்றுப் பாதையில் நாமும் உறுதியுடன் பின் தொடர்வோம்.
