சமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்!
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சில காலங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் இவரின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்சின் (மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது மேஜர் கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தளபதி தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த,14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்றவெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார். 1984 இன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்டபகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “ரான்கோப் பாப்பா” ஆகும். இவர் 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான சண்டையில், தளபதி தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், தளபதி பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்களாக முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தளபதி தீபனின் இளைய சகோதரனாகிய ,லெப். கேணல் கில்மனும் (வேலாயுதபிள்ளை சிவகுமார்) போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993 இல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக தளபதி பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தளபதி தீபன் நியமிக்கப்பட்டார்.. இந்த இரண்டு வீரத்தளபதிகளும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் சூன் மாதமளவில் சிறிலங்காப் படைகளுடனான 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. தளபதி பால்ராஜின் தலைமையின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும். தளபதி பால்ராஜும் தளபதி தீபனும் 1991இல் மேற்கொள்ளப்பட்டஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்க அழிவை எதிரிக்குக் கொடுத்து, வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992இல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணைந்த தாக்குலான மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கை வெற்றியும் அச்சமரில் பங்கு பற்றி போராளிகளுக்கு உத்வேகத்தையும் மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தளபதி தீபனின் திறமையும் வீரமும் அக்காலப்பகுதில் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காகயாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புரள வைத்த பெருமை தளபதி தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே தளபதி பால்ராஜ் விழுப்புண் காரணமாக களத்திலிருந்து வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.அதன் பின்னர் தளபதி தீபனே முறியடிப்புச் சமருக்குத் தலைமை தாங்கினார். தளபதி தீபனின் தந்திரத்திர திட்டமிடலின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக் கணக்காக்க் காத்திருந்த அணிகள் முன்னேறியஇராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகளால் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது. இந்தஇரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை கடற்கரை மணலுக்குள் புதைத்து உருமறைப்போடு, இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதிக்கு நேரே ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர். 1993 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தளபதி தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகது.1994 இல் தளபதி தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995 இல் அப்பேச்சு வார்த்தை முறிவடைந்து 3ம் கட்ட தமிழீழப் போருக்கு வழி சமைத்தது. 1995இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான “புலிப்பாய்ச்சல்”நடவடிக்கையிலும் “இடிமுழக்கம்”இராணுவ நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் தளபதி பால்ராஜ்,தளபதி சொர்ணம் தலைமையிலும் பின்னர் தளபதி தீபன் ,தளபதி பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தளபதி தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் நிறைவடையும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் அக்காலப்பகுதியில் புலிகள் இருந்தனர்.தளபதி தீபனை அழைத்த தேசியத்தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான வேவு நடவடிக்கையை (ரெக்கி)ஆரம்பிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார். தளபதி தீபனின் திறமையான வேவுத்தரவுகளிலும் திட்டமிடலினாலும் 1996 சூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டது.வட்டுவாகல் பகுதியூடாக தளபதி தீபன் அணிகளோடு தடைகளை உடைத்து உள்நுளைந்தார். முகாமில் இருந்த 1000 த்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். முகாமிலிருந்து இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகள் உட்பட ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் என பெருத்தொகைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின. தொடர்ந்து சிறிலங்கா அரச படைகளால் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை 1997இல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தளபதி தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது. இத் தாக்குதல் நடவடிக்கையின் போது தளபதி தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக லெப். கேணல் விக்கீஸ், லெப்.கேணல் அறிவு மற்றும் தளபதி லோறன்ஸ் ஆகியோர் விளங்கினார்கள்.புளியங்குளத்தை மையப்படுத்தி,மண் அணைக்கட்டும் அகழியும் அமைத்து சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்து ,புளியங்குளத்தைப் புரட்சிக்குளமாக மாற்றியது என்பது தளபதி தீபன் என்பது யாவரும் அறிந்ததே.
1998இல் ஜெயசிக்குறு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை நகரை ஓயாத அலைகள்2இன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தளபதி தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும். 1999இல் புலிகள் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையை ஆரம்பித்து ,படையினர் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்களாக பெரும் இழப்பினை சந்தித்துப் பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே நாட்களில் வவுனியா வரை விரட்டப்பட்டனர். மாங்குளத்திலிருந்து படைகளை விரட்டியவரும் தளபதி தீபனே.அதனை தொடர்ந்து மணலாறு, மன்னார் பிரதேசங்களிலிருந்து ஓயாத அலைகள் 3 இன் படையணிகளால் சிங்கள இராணுவம் விரட்டப்பட்டனர்.சிறிலங்கா அரசு விழி பிதுங்கி நின்றது.ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாகவும் தமிழர் படையின் வீரத்திற்கு இலக்கணமாக அமைந்ததும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991இல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தேசியத்தலைவர் சமர்க்களங்களின் நாயகன் தளபதி பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தளபதி தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் தளபதி பால்ராஜ். வரலாற்றுத் தரையிறக்கமான குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமினை பின் பக்கமாக தாக்கியும் படைகளுக்கு பெரும் இழப்பினைக் கொடுத்தும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தளபதி தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொடக்கம் 2009 சனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளைத் தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன். அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர்களில் தளபதி தீபன் ஒருவர்.தொடர்ந்து முல்லைத்தீவின் முக்கிய பகுதிகளைத் தக்கவைக்க அர்ப்பணிப்போடு படைநடத்திய தளபதி, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில்நடந்த வரலாற்று முற்றுகைச் சமரில் தீரமுடன் போரை வழிநடாத்தினார்.இறுதியில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தளபதி தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தளபதி தீபனுக்கு நெஞ்சிலே விழுப்புண் ஏற்பட்டது.ஆனாலும் தொடர்ந்து இறுதிரை போராடிய கட்டளைத்தளபதி தீபன், முற்றுகையை உடைத்து வெளியேறும் வேளையில் எதிரியின் நச்சுக்குண்டுத்தாக்குதலில் பிரிகேடியர் தீபனாக ஆனந்தபுரம் மண்ணில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது சுழன்று அடித்துக்கொண்டிருந்த இந்தப் வீரப்புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே அமைதியாகப் போனது. சமர்க்களங்களின் நாயகன் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் என்பது போல,எந்தவித ஐயங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் தளபதி பிரிகேடியர் தீபன் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.
இந்த வரலாற்று நாயகர்கள் தியாக வழியில் நாமும் வழிநடப்போம்.
-சாணக்கியன்-
