தமிழீழத் தாகத்துடன் இறுதிவரை களமாடிய கேணல் நாகேஸ்..
தென் தமிழீழம் , மட்டக்களப்பு புல்லுமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தளபதி கேணல் நாகேஸ் அவர்கள்,1986 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார். கடந்து வந்த கடினமான போராட்டக் காலங்களில் சிறப்பாக செயற்பட்டு வந்த இவர், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பமானபோது புல்லுமலைப்பகுதி விடுதலைப் புலிகளின் முகாமின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்நெருக்கடியான காலகட்டத்தில் அவரின் தலைமையில் இந்திய,சிறிலங்காப் படையினருக்கெதிரான பல வெற்றிகரத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இத்தாக்குதல் நடவடிக்கைகள் பலவற்றில் இராணுவத்தினரின் உடல்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
கண்ணிவெடித் தாக்குதல்களில் அவருக்கென்று தனியிடமொன்றைப் பெற்றிருந்த இவரால்,பல வெற்றிகர கண்ணிவெடித் தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் இழப்புக்களை எதிரி சந்திக்க நேர்ந்தது.அச்சூழலில் இந்தியப் படைகளின் (“தீப்பெட்டி ஜீப்”) மிகச் சிறிய ஜீப் வண்டிமீது தாக்குதல் நடத்துவது பெருத்த சவாலாக இருந்த நேரம்,அதன் பருமன் வேகம் என்பன வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை மேற்கொள்வது கேள்விக் குறியாக்கி நின்றது.ஆனால் மண்டூர் என்ற இடத்தில் வைத்து நாகேஸ் தலைமையில் மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில் அந்த ஜீப்வண்டி சுக்குநூறானது. பின் இந்திய படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து துரோகிகளுடனான சண்டைகளில் நாகேசின் அணி பல முனைகளிலும் பங்குகொண்டு அவர்களைச் சிதறடித்தது. பின்னர் நடைபெற்ற சிறிலங்கா படைகளுடனான பல்வேறு சண்டைக் காலங்களில் நாகேஸ் தலைமையிலான அணிகள் சிறப்பாக சமரிட்டன. காலத்தின் தேவையை உணர்ந்து தமிழீழ எல்லைகள் கடந்தும் போரிடவேண்டிய கடமை நாகேசிக்கு வழங்கப் பட்டது. நகேசின் அந்தச் சிறிய அணி மலையகம் வரை தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்தது. மலையகத்தில் கூட தாக்குதல் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றிய பெருமை கேணல் நாகேஸ் மற்றும் அவருக்கு துணைநின்ற மாவீர்ர் மேஜர் விஸ்ணு (சின்னப் புல்லுமலை) ஆகியோருக்கே உரித்தாகும். மலையகத்தில், மிகச் சிறிய இந்த அணிக்கெதிராக சிறிலங்கா படைத்தரப்பு ஆயிரக்கணக்கில் படையினரை ஈடுபடுத்தியிருந்த நிலையில் அவற்றையும் தாண்டி இலக்கினை அடைந்தவர் கேணல் நாகேஸ்.பூநகரி படைத்தள அழிப்பு நடவடிக்கைகளுக்கென மட்டக்களப்பு அம்பாறைப் பிராந்தியத்தில் இருந்து போராளிகள் புறப்பட்ட போது நகேசின் அணியும் அதில் இடம்பெற்றது. ஜெயந்தன் படையணி உருவாக்கப்பட்டபோது தாக்குதல் தளபதிகளில் ஒருவராக நாகேஸ் நியமிக்கப் பட்டார். நாகதேவன் துறைப் பகுதிக்கு தளபதி லெப்.கேணல் அன்பு தலைமையில் சென்ற அணியில் ஜெயந்த படையணியின் ஒரு பிரிவு நாகேஸ் தலைமையில் களமிறங்கியது. அந்தமுனையிலும் ஜெயந்தன் படையணி தனது போர்க்குணத்தைக் காட்டியது. பின்னர் பலாலி முனரங்க பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் நாகேஸ் தலைமையிலான அணிசெயற்பட்டது. மீண்டும் தென்தமிழீழம் சென்ற அணிகள் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அத்தாக்குதல்கள் பலவற்றை இவரே நெறிப்படுத்தினார்.
பின்னர் ஜெயசிக்குறு எதிர் சமருக்காகப் படையணிகள் கிழக்கில் இருந்து வன்னி வந்தபோது நாகேசும் ஜெயந்தன் படையணித் தளபதிகளுள் ஒருவராக வன்னிகளத்திற்கு வந்தார். ஜெயசிக்குறு களமுனைகளில் பகுதிப் பொறுப்பாளராக கடமையாற்றிய கேணல் நாகேஸ் ஓயாத அலைகள் நடவடிக்கையிலும் அணிகளுக்குத் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் நாகேஸ் போராளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதனோடு மக்கள் நலச் செயற்பாடுகளிலும் அவர் கவனம் செலுத்தத் தவறவில்லை. புல்லுமைப் பிரதேசம் எங்கும் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு போராளியாக இவர் விளங்கினார். இவற்றிக்கு மேலாக மட்டக்களப்பின் எல்லைகளைக் காத்து நின்ற ஒரு சிறந்த வீராகவும் அவர் கொள்ளப்படுகிறார். இப்பகுதி சிங்களப் படையினருக்கும் சிங்களக் காடையருக்கும் நாகேஸ் என்றபெயர் எப்போதும் அச்சமூட்டும் ஒன்றாகவே இருந்துவந்தது. இவ்வாறு இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தன் உடலெங்கும் விழுப்புண் தாங்கி தமிழீழத்தின் களங்கள் யாவும் ஏன் அதற்கு அப்பாலும் தொடர்ந்து களமாடியவர் மாவீரன் கேணல் நாகேஸ். அந்த வீரனுக்கும் மனைவி குழந்தைகள் இருந்தனர் ஆனாலும் அந்த மாவீரன் அவற்றிற்கு மேலாக இந்த மண்ணையும் மக்களையும் நேசித்தான்.
தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து,சிறிலங்கா அரசின் ஒட்டுமொத்த படைகளையும் திரட்டி,வல்லாதிக்க அரசுகளின் படைவலுவோடு தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த கொடிய போரை எதிர் கொண்டு படைநகர்த்தி போரிட்டு, இறுதியில் தமிழீழமே எமது தாயகம் என்று களமாடிய அந்த மாவீரன் ஆனந்தபுரம் என்ற வரலாற்று மண்ணில் இறுதிவரை போராடி தன்னை கேணல் நாகாசாக வீரவரலாறானார்.
