பிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும் அளவுக்குப் பெண்புலிகளை வழிநடத்தி, வான்முட்டும் வெற்றிகளை, மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைப் படைக்க வைத்த இரண்டாம் லெப். மாலதி படையணியின் சிறப்புத்தளபதி. ஓப்பரேசன் லிபரேசனில் தொடங்கிய அவரது களமுனைப் பயணம் விடுதலைப்புலிகளின் இறுதி முற்றுகைச் சமராக இருந்த ஆனந்தபுரத்தில் தனது இறுதி மூச்சைத் தமிழீழ மண்ணுக்காய் அர்ப்பணிக்கும் வரை ஓய்வு என்பதையே அறியாத உழைப்பாளி.
எப்போதும் அவரது பேச்சும் மூச்சும் தலைவனின் எண்ணங்களைத் தாங்கியதாகவே இருந்தது. போராளிகளோடு உரையாடும்போதுகூட ‘அண்ணை எதை நினைக்கின்றாரோ அதை நாங்கள் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்” என்ற உறுதி மட்டுமே இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் படையணி பங்கேற்ற பெரும்பான்மைக் களங்களில் எல்லாம் கட்டளைத் தளபதியாய் நின்று போர் அரங்குகளை வழிப்படுத்துவார். தொலைத் தொடர்புக் கருவி தாங்கிவரும் அவர் குரல் தனித்து நின்றுகூட போராளிகளைச் சாதிக்க வைக்கும் துணிச்சலை அள்ளித்தரும். அந்தக் கட்டளைகளில் இருக்கும் நேர்த்தியும் தெளிவும் புதிய போராளிகளைக் கூட களமுனையின் சாதனைப் புலிகளாய் உருவாக்கிய சம்பவங்களோ ஏராளம்.
அவ்வளவு போரியல் நுட்பமும் போரியல் தெளிவும் மிக்க போராளி. எல்லோருமே தமது கடைக்குட்டி சகோதரர்களோடு அதிக அன்பு வைப்பது வழமை. விதுசா அக்காவுக்கும் தனது தம்பி மீது அளவுகடந்த பாசம். அவனும் காலஓட்டத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்தான். ஜெயசிக்குறு களமுனை. எதிரியின் உடைப்புச் சமரொன்று. அதனை முறியடிப்புச் செய்யும் களத்தில் கட்டளைகளைப் பிறப்பித்தபடி விதுசா அக்கா நிற்கின்றார். அதே களமுனையில் அவரது தம்பியும் நிற்கின்றான். தொலைத்தொடர்பில் செய்தி வருகின்றது. அவரது சகோதரன் வீரச்சாவடைந்து விட்டதாக, பின்னரங்குக்கு வந்தால் வித்துடலை அனுப்ப முதல் பார்க்கலாம் என, விதுசா அக்காவிடம் செய்தியைச் சொன்னபோது ‘சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன். தன்னைப் பார்க்க வேண்டாம் வித்துடலை அனுப்புங்கள்” என்று கூறிவிட்டு, அவர் தனது அன்புத் தம்பியின் வீரச்சாவைத் தெரிந்த பின்னரும் உறுதி தளராது மிகத்தெளிவாகக் கட்டளைகளைப் பிறப்பித்து அந்தச் சமரை வெற்றிகரமாக வழிநடத்தினார். இதுதான் விதுசா அக்கா. போர்க்களத்திலே தனது பெரும் பகுதி வாழ்க்கையைக் கழித்த பெண்புலிகளின் பெருந்தளபதி ஆனந்தபுரத்தில் விடுதலைக்கு விதையாகிப் போனார்.
.
