அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் தமிழீழத் தேசியத்தலைவருக்குக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்கள் எழுதிய இறுதி மடல்.
உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தேசியத்தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார்.
ஆனாலும், அந்தக் கடிதத்தில் இருந்த “மக்கள் என்கின்ற சொல் தேசியத்தலைவரை மிகவும் நெகிழச்செய்தது. அதுவே அவரை ஆனந்தபுரத்திலிருந்து வெளியேற்றியது. அந்தக் கடிதத்தைத் தேசியத்தலைவர் அவர்களுக்கு எழுதியது சோதியா படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்கா. உண்மையிலேயே அவளது தோற்றத்துக்கும் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்கவில்லை. மெலிந்த சிறிய உருவம். எப்போதும் புன்னகை மாறாத முகம். துள்ளித்துள்ளி ஓடும் மான்குட்டி போல அவள் நடையின் வேகம். முடியாது என்பது அவரது அகராதியில் எப்போதும் இருந்ததில்லை.
தெரியாது என்று எதனையும் விட்டுவிட்டு அவள் ஒதுங்கியதும் இல்லை. எல்லாப் போராளிகளையும் புதியவர், பழையவர் , பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றிப் பார்க்கும் அவரது குணம், கடுமையாகப் பேசவோ, கண்டிக்கவோ தெரியாத அன்பு நிறைந்த அவளது பேச்சு எல்லாப் போராளிகளுக்குமே அவள்மீது பிடிப்பினை ஏற்படுத்தியது. “என்னடாப்பா… நீங்கள்….” இந்த வார்த்தை அவரது வாயிலிருந்து வருகின்றது என்றால் அவர் கடுமையான கோபத்தில் இருக்கின்றார் என்பது அர்த்தம். கோபத்தில் கூட கடிந்து பேசத் தெரியாத போராளி. தேசியத்தலைவர் அவர்கள் பயிற்சியின்போது ஒவ்வொரு போராளிகளையும் நன்கு இனங்கண்டு பயிற்சி நிறைவடைந்தபோது அனைவரையும் ஒவ்வொரு பிரிவுக்குப் பிரித்துவிடுகின்றபோது துர்க்காவுக்கு வழங்கப்பட்டபணி மருத்துவப்பணி.
ஒரு மருத்துவப் போராளிக்கு இருக்கவேண்டிய அனைத்துத் தகுதியுமே அவளிடம் நிறையவே இருந்தது. அதேபோல் காலப்போக்கில் புதிய போராளிகளுக்கான பயிற்சிகளை வழங்குகின்ற பாசறைகளை வழிப்படுத்துகின்ற பொறுப்பு அவளுக்கு வழங்கப்படுகின்றது. அதுவும் அவளுக்கு மிகவும் பொருத்தமான பணியாக இருந்தது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள், சோதியா படையணியை உருவாக்கி அதனுடைய சிறப்புத் தளபதியாக துர்க்காவை நியமித்தபோது உண்மையிலேயே பலரிடம் பலகேள்வி இருந்தது. ஏனெனில் இந்தப் பெரும்பணியை ஒப்படைக்கும்போது அவள் ஒன்பது பேர் கொண்ட அணிக்குத் தலைவியாக இருந்தாள்.
படையணிப்பொறுப்பை எடுத்தபோது உண்மையிலேயே அவளுக்குக் குறிபார்த்துச் சுடுவது என்பது சரியாக வராது. படையணிக்கான பயிற்சிகள் நடைபெறும்போது சளைக்காமல் ஓய்வு என்பதே எடுக்காது தான் அந்தப் படையணியின் சிறப்புத் தளபதி என்ற எண்ணம் ஒருதுளிகூட இன்றி, போராளிகளோடு போராளியாக நின்று, ஒவ்வொரு அணியணியாகப் பிரித்து சூட்டுப்பயிற்சிகள் வழங்கப்படும் போது, ஒவ்வொரு அணியோடும் சென்று ஓய்வோ சோர்வோ இன்றி சூட்டுப்பயிற்சியை எடுத்தார். எல்லோருக்கும் ஓய்வு வழங்கப்படும்போது கூட துப்பாக்கியை எடுத்து குறிபார்ப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எப்போது பார்த்தாலும் அவளது கை நீட்டிக் குறிபார்த்தபடியே இருக்கும். கடின உழைப்பு, விடாத முயற்சி விரைவிலேயே சிறந்த சூட்டாளராக அவளை மாற்றியது. ஈருந்து ஓடிக்கொண்டே மிகநேர்த்தியாகக் குறிபார்த்துச்சுடும் வல்லமையை அவளுக்குள் உருவாக்கியது. இதுவே ,விடுதலைப் போராட்டத்துக்குப் புதிய பதிய ஆயுதங்கள் வரும்போது அந்த ஆயுதங்களின் சூட்டுவலுவைச் சீர்செய்து பரீட்சித்துப் பாரக்கும் அளவுக்கு தளபதி பிரிகேடியர் துர்க்காவை உயர்த்தியது. எத்தனையோ ஈக வரலாறுகளையும், அர்பணிப்புகளையும் தாங்கி நிற்கும் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இவள் ஒரு மைல்கல். இறுதிக் கட்டப் போர் மிக இறுக்கமடைந்திருந்த காலப்பகுதி. களமுனைகளோ நாளுக்கு நாள் விரிந்து கொண்டே சென்றது.

அவளுடன் நின்ற தோழிகள், அணித்தலைவர்கள் எனப் போராளிகள் ஓர்மத்துடன் நின்று களமுனைகளை எதிர் கொண்டு நின்றனர். போரியலில் நல்ல ஆளுமையைப் போரிடும் பேராற்றலை தனக்குள்ளே வளர்த்துக் கொண்ட தளபதி துர்க்கா அவர்கள்,சமர்க்களங்களில் நாயகியாய், களமுனைகளில் போராளிகளை வழிப்படுத்தும் நல்ல தளபதியாய் வெற்றிகள் பல படைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே மீண்டும் விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கவைத்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் இறுதிவரை போராடி, எம் தேசத் தலைவனைப் பத்திரமாகக் காப்பாற்றி விட்ட மனநிறைவுடன் ஆனந்தபுர மண்ணில் வரலாறாகிப் போனாள்.
ஆனந்தபுர மண் என்பது வீரவரலாறு படைத்த வரலாற்றுமண். அந்த மண்ணில் சிறிலங்காப் படைகளின் பெரும் முற்றுகையைத் தடுத்து,சிங்களப் படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி ஓர்மத்துடன் போரிட்ட போராளிகளுக்குக் கட்டளை வழங்க, ஈற்றில் நேரடியாக சிங்களப் படைகளோடு போரிட்டு வீரசாதனை படைத்து வீரகாவியமானார் பிரிகேடியர் துர்க்கா.
