திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்,நேற்றிரவு (28.07.2026) வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள் இருவர் தங்களைத் தாக்கியதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தத் தாக்குதலிலேயே தனது மனைவி உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்காக, திருகோணமலை தடயவியல் பிரிவு பொலிஸாரும் மூதூர் பொலிஸாரும் இன்று (29) காலை சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
