நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகல்கடவல பகுதியில், நிக்கவரட்டிய பிரதேச போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட வாகன சோதனையின் போது, பாரியளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 116 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கல்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் நேற்று (22) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை 03 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதாலகம பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன்; சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று (22) இரவு மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 101 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் ரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
