மட்டக்களப்பு படுவான் பெருநிலப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோர சம்பவம் ஒன்று இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாந்தாமலை நெல்லிக்காடு வயல்வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் கொத்தியாபுலையைச் சேர்ந்த 27 வயதான குகநாதன் ரணுஸ்கா எனும் இளம் தாயாவார். இவர் நேற்று (19) தனது குழந்தையுடன் மட்டக்களப்பு நகரத்திற்கு நகை அடகு வைப்பதற்காக சென்ற பின்னர் காணாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை குறித்த வயல்வெளியில் உள்ள கிணற்றிலிருந்து அவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவருடன் சென்ற குழந்தை, அருகிலுள்ள வயல்வெளியில் அழுது கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் அதிர்ச்சிகரமாக, குறித்த கிணற்றிற்குள் பல நாட்களுக்கு முன் இறந்ததாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட இளம் தாய் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
