கேணல் இளங்கீரன் அவர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்கம் .
வன்னியில் நடைபெற்ற சமரில் 19.03.2009 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.
கேணல் இளங்கீரன் தென் தமிழீழம் , மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்.
ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன் ஆவர்.
2006 ஆம் ஆண்டு வன்னிப் போர்க்களங்கள் திறக்கப்பட்டு,தொடர் சண்டைகள் நடைபெற்று வந்த சூழலில் கேணல் இளங்கீரன் அவர்கள்,தன்னுடைய அணிகளை சிறப்பாக வழிநடாத்தி இராணுவத்திற்கு பேரழிகளை ஏற்படுத்தி, படைகளின் முன்னேற்ற முயற்சிகளை தடுத்துநின்றவர்.2009.03.19 வரை களமுனைகளில் சுழன்றடித்த போர்த்தளபதி கேணல் இளங்கீரன் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் அத்தியாயமாவார்.நெருக்கடி நிறைந்த 2008 மற்றும் 2009 களில் களமுனைகள் ஓயாது அதிர்ந்துகொண்டிருந்த போது ஓய்வின்றி தன்னை அர்ப்பணித்து இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த கேணல் இளங்கீரனுக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
