மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பத்து கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படவில்லை. இத்தகைய செயன்முறைக்கு இனியும் ஆதரவளிக்க முடியாது. நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறுவதை சுட்டிக்காட்டி தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர். நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறுவதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்கள் சார்பில் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்கையில், இதுவரைக் காலமும் தெரிவுக்குழுவின் பத்து கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படவில்லை. இத்தகைய செயன்முறைக்கு இனியும் ஆதரவளிக்க முடியாது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தெளிவான முன்மொழிவொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்வைத்துள்ளது. அதில் பெண்களுக்கு 25 சதவீத உத்தரவாத பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளடங்கியுள்ளது.
அதேவேளை, மற்றுமொரு சட்ட ரீதியான வழிமுறையும் பாராளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் முன்வைக்கப்பட்ட தனிநபர் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினால், அந்தச் சட்டமூலத்தை முன்னெடுத்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை உருவாக்க முடியும்.
எனவே, தேர்தல்களை நடத்துவதற்கான நடைமுறை மற்றும் சட்ட ரீதியான தெரிவுகள் ஏற்கனவே பாராளுமன்றத்தின் முன் உள்ளன. இனிமேல் தேவையானது மேலும் செயன்முறைகளை நீடிப்பதல்ல, அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஆகும்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்துக்குள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதாகத் தெளிவாக உறுதியளித்திருந்தது. இந்த உறுதிமொழி விஞ்ஞாபனத்தின் 128ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் பல ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின்றி இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமது பிரதிநிதிகளை ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யும் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் தொடர அனுமதிக்க முடியாது. எனவே, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தெளிவான காலவரையறையுடன் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கமும் தெரிவுக்குழுவும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
தெரிவுக்குழு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தீவிரமான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தவறினால், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மிகவும் தீவிரமானதொரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
