நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை (9) பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
அதிகாலை முதல் நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழிந்தன.
காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜைகள் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காலை 7 மணியளவில் முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில் திருத்தேரில் எழுந்தருளினார்.
தேரில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியின் இரத பவனி நான்கு வீதிகளிலும் சென்றபோது பக்தர்களின் “அரோகரா” என்று குரல் எழுப்பினர்.
வீதியின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும், மலர் தூவியும் இரதத்தில் எழுந்தருளிய நல்லூரானை தரிசித்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இன்றைய உற்சவம் பக்தி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் சங்கமமாக அமைந்ததுடன், நல்லூரின் ஆன்மிக மரபினை பிரதிபலிக்கக்கூடிய, உற்சவ மூர்த்தி பவனி சென்ற இரதமானது காலை 8.30 மணியளவில் ஆலயத்தின் தேர் நிலையிடத்தை சென்றடைந்தது.









