இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு
செம்மணி மனிதப் புதைகுழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hillல் ஒன்றுதிரண்டனர்.
தமிழீழதாயகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்றான செம்மணி புதைகுழியில் தோண்டி எடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை அடையாளப்படுத்தும் விதமாக, நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடிப் படுத்து இறந்த உடல்கள் போல் காட்சி அளித்தனர்.
செம்மணியில் புதைக்கப்பட்டிருந்த உடல்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய 18 வயது தமிழ் மாணவியான கிருஷாந்தி குமாரசாமியின் கூட்டு வன்புணர்வு மற்றும் படுகொலையை அடையாளப்படுத்தும் வகையில், இரத்தக் கறையுடனான பிரமாண்டமான வெள்ளைச் சீருடையைச் சுற்றி இவர்கள் இறந்த உடலங்களைப் போல் இருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, செம்மணி மனிதப் புதைகுழி மீது கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என கவனமாக கட்டமைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் பிம்பத்திற்கு சவால் விடும் வகையிலும் வீதியால் சென்றவர்களுக்கு அஞ்சலட்டைகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா ஒரு விடுமுறைக்கான இடமாகச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் கவர்ச்சியான விளம்பரங்களில் பெரும்பாலும் மறைக்கப்பட்டுள்ள, தீவின் நீண்டகால மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டூழியங்கள் குறித்த வரலாற்றை பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதே இப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் PEARL ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், பிரித்தானியா முழுவதிலும் உள்ள பல தமிழ் அமைப்புகள் கலந்துகொண்டன.








