இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (17) அதிகாலை 12:46 அளவில் 5.9 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது.
எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன.
இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
