கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருசுட்டிக்குளம் பகுதியில் டிரக்டர் (உழவியந்திரம்) விபத்தில் சிக்கி 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி, விபத்தையடுத்து படுகாயமடைந்த குறித்த இளைஞர் புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குருசுட்டிக்குளம் ஆலயத்திற்குச் சொந்தமான காணியை துப்புரவு செய்வதற்காக அந்த இளைஞர் டிராக்டரை செலுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, டிராக்டரை ஸ்டார்ட் செய்ய முற்பட்ட போது அதில் ஒரு இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதனை பழுதுபார்க்க முயன்ற போது, டிராக்டர் எதிர்பாராதவிதமாக முன்னோக்கி நகர்ந்ததால், அதன் சக்கரம் ஏறி குறித்த இளைஞர் நசுங்கியுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் குருசுட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
