தமிழீழ தேசத்தின் தலைமகனாம் கரிகாலனின், திருமகள் துவாரகா எனும் அகமதி!
காவியம் செதுக்கிய வீரத் திருமகள்!
படைக்கல முனையில் துணிவினை ஏந்தி,
பாய்கணை தீரும் வரை போராடியவள்!
இனத்தின் எழுச்சிக்காய் தன்னையே அர்ப்பணித்து,
ஈழத் தரணியின் அணையாத பெருநெருப்பு!
வீரத்தின் விதையாய் விளங்கிய எம் தங்கைக்கு,
விழிநீர் மலர்களால் வணக்கம் செலுத்துகின்றோம்!
அண்ணலின் நிழலில் வளர்ந்த இனிய காலம்,
அன்பினால் நிறைந்த நினைவுகள் எண்ணிலடங்கா!
“தங்கையே” என்றழைத்து மகிழ்ந்த நாட்கள்,
தாயகக் கனவினை நெஞ்சமதில் விதைத்தன!
இன்றைய இந்நாளில் உன் பிறப்புநாளை,
இதயத் தணலுடன் நினைவில் கொள்கின்றோம்!
மண்ணின் மறுமலர்ச்சியே உன் பிறப்புநாள்,
மறவாது என்றும் உன் புகழைப் பாடுவோம்!
தேசியத் தலைவனின் குருதியில் உதித்தவள்,
தேசத்தின் விடியலுக்காய் களமதில் பாய்ந்தவள்!
பெண்ணினப் பெருமைக்கு இலக்கணமாய் நின்றவள்,
பேரன்புச் சகோதரியாய் எம் உள்ளம் நிறைந்தவள்!
முடிவிலாச் சமரில் முன்னணியில் திகழ்ந்தவள்,
முடிசூடா வீரத்தின் அடையாளமாய் விளங்கியவள்!
உன் நினைவே எம் உயிர்கள் போற்றும் செல்வம்,
உன் பிறப்புநாளில் தமிழினம் உருகி நிற்கும்!
பாய்கணை முழக்கத்தில் வளர்ந்தாயோ நீ?
பண்புடைத் தோழமையில் உச்சியாய் நின்றாயோ?
உடலால் மறைந்தும் விழிகளிலே வாழும்,
வீரத்தின் ஓவியமே, உன்னைப் போற்ற வருவோம்!
படத்தினில் தோன்றும் உன் தோற்றம் கண்டால்,
புயலென எழுகின்றது நெஞ்சத்தின் உணர்வு!
தாயகத் தரணிக்காய் தன்னை அர்ப்பணித்த முத்தே,
தமிழரின் உள்ளத்தில் எரியும் அக்னிச் சுடரே!
இன்றைய இந்நாளில் உன் பிறப்புநாள்,
இனத்தின் உள்ளத்தில் எரியும் நினைவுநாள்!
அகவை கூடும் இவ்வேளையில் உன்னை,
அகம்நிறை அன்புடன் வாழ்த்தி வணங்குகின்றோம்!
மண்ணின் மகளாய் என்றும் நீ விளங்க,
மறத் தமிழர் நெஞ்சங்கள் வாழ்த்திசை பாடும்!
காலங்கள் கடந்தும் அணையாத ஒளியே,
காவியத் தங்கையே, அகவைநாள் வாழ்த்துகள்!
களத்தின் ஒளியாய் திகழ்ந்திடுவாய் என்றும்!
விடுதலைக் கீதத்தின் இசையாய் ஒலித்திடுவாய்!
வீழாத மானத்தின் பெருமையாய் நிலைத்திடுவாய்!
நினைவு தரும் இந்நாளில் உணர்வின் வழியே,
வாழ்த்துகின்றோம் அகமார்ந்த வணக்கத்தால்!
விண்ணிலும் மண்ணிலும் நிலைக்கும் எம் தங்கையே,
வீர வணக்கங்கள் என்றும் உனக்கே, தரணியிலே தமிழ் வாழும் வரை நின்புகழ் நிலையாக நிற்கும்.
அகமதியென்னும் அண்ணன் மகள் துவாரகா புகழ் வாழியவே!
– அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி
