நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை!
குமுதினி படகுப் படுகொலை என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 40 வருடங்கள்…
நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் சிறிலங்காக் கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் முப்பத்துமூன்று பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, சிறிலங்காக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆறு பேர் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். இப்படுகொலையானது உலகறிந்த உண்மை.இப்படுகொலைச் சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன.
பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி படகு 1960களில் சிறிலங்கா அரசால் நெடுந்தீவிற்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த சிறிலங்காக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது.

ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது. இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.
இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.: “எனது தலையில் அடித்தார்கள்.
நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்படியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.” சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது.பலர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தியது. இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் “ இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,” ” சிறிலங்கா அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது.
நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இந்தப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழினப் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை நெடுந்தீவு மக்கள் மாத்திரமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர். கடலம்மா கடலம்மா… நீயே சொல் குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? எம்மவரின் அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு ‘குமுதினி’ குருதி வடிய வந்தாள்.
கடலம்மா கண்டாயோ
கார்த்திகேசு என்னவானான்? எந்தக் கரையில் உடலூதிக் கிடந்தானோ? ஓ…! சோழகக் காற்றே நீ, வழம்மாறி வீசியிருந்தால்… ‘குமுதினி’ வரமாட்டாள் என்று நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்.
பாவம் மரணங்களின் செய்தி கூடக் கிட்டாத தொலைதீவில், ஏக்கங்களையும் துக்கங்களையும் கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் மக்கள்… கடலம்மா நீ மலடி ஏனந்தத் தீவுகளை அனாதரவாய்த் தனியே விட்டாய்? கடலம்மா… உன் நீள் பரப்பில் அனாதரவாய் மரணித்த எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி ‘அனாதைக் கல்லறைகள்’ என நினைவூட்டு. ஆனால், இனிவருங் கல்லறைகள் வெறும் இழப்புக்களின் நினைவல்ல, எமது இலட்சியங்களின் நினைவாகட்டும்!

