அநுர அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் ( தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை அலுவலகத்தில் நேற்றிரவு (07.02.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி ஐயா, சபாரத்தினம்பிள்ளை ஐயா, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஐயா ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள்.
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர எடுத்த முயற்சியை தொடர்ந்து தமிழ்மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும் என்ற அடிப்படையிலே இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அன்றைய யாழ்ப்பாண மேயராக இருந்த நாகராஜா தலைமையிலேயே ஒற்றுமை மாநாடு வல்வெட்டித்துறையில் உள்ள எட்வேர்ட் தங்கவடிவேல் ஐயாவின் வீட்டில் இடம்பெற்றது.
