10 கிலோ போதைப்பொருளுடன் பாங்கொக்கிலிருந்து வந்தனர்
இலங்கை போலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையில் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் ஏர் ஏசியா விமானத்தில் இரவு 10.10 மணியளவில் வருகை தந்தவர்கள். இரகசியத் தகவலின் அடிப்படையில் செயல்பட்ட அதிகாரிகள் இவர்களின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு நடுவே சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மொத்தமாக 110 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. ஒவ்வொரு தேரரும் சுமார் 5 கிலோகிராம் வீதம் தனித்தனியாகக் கொண்டு வந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 22 ஆம் திகதி ஒரு தர்மகர்த்தாவால் வழங்கப்பட்ட விமான பயணச்சீட்டுகள் மூலம் இவர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் இவர்கள் சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களின் அலைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும், தேரர்கள் இத்தகைய குற்றத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவர் என போலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
