சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாகத் திருட்டுத்தனமாக வெளியே கொண்டு செல்ல முயன்ற இருவர் இன்று (24) அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
சுங்க அதிகாரிகள் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், இந்தச் சிகரெட் கடத்தல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது:
- முதலில் சீனாவில் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்ட சிகரெட்டுகள் கம்போடியா கொண்டு செல்லப்பட்டுள்ளன.
- அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
- இறுதியாக மலேசிய எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க வந்தடைந்தன.
கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 53 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள் ஆவர். இவர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 28,400 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் (412 பொதிகள்) கைப்பற்றப்பட்டன.
இதன் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய வருகை முனையத்தில் சோதனையிட ஏதுமில்லை என அறிவிப்பவர்கள் செல்லும் ‘பசுமைப் பாதை’ ஊடாக தப்பிக்க முயன்ற போதே இவர்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். தற்போது சந்தேக நபர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ள சுங்க அதிகாரிகள், இந்த சர்வதேச கடத்தல் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
