அன்னை பூபதி அவர்களுடைய 38 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகளும் யேர்மனியிலே மிக உணர்வோடு முன்னெடுக்கப்பட்டது. மாநில ரீதியாக கெசன் மாநிலத்தின் பிராங்பேர்ட் நகரத்திலும், நாடுதழுவிய வகையிலாக மத்திய மாநிலத்திலுள்ள டோட்மூண்ட் நகரத்திலும் கடந்த 19.04.2026 அன்று நடைபெற்றது.
டோட்மூண்ட் நகரிலே நடைபெற்ற நிகழ்வின்போது, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களின் குடும்ப உரித்துடையோர் மதிப்பளிப்பும் நடைபெற்றது. வணக்க மண்டபத்தின் ஒரு பகுதியிலே பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட மதிப்பளிப்பு நிகழ்வின்போது, மதிப்புரை, உபசரனைகள் நடைபெற்று, நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
மதிப்பளிப்பினைத் தொடர்ந்து, மாலை 15.30 மணிக்கு ஆரம்பமான வணக்க நிகழ்விலே, பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் சுடர் வணக்கம், அகவணக்கம் என்பன இடம்பெற்று, இசைவணக்கமும் நடைபெற்றது.
அன்னை பூபதி அவர்களுடைய 38ஆம் ஆண்டு நினைவையொட்டி, யேர்மனிய நாடுதழுவி நடாத்தப்பெற்ற கவிதைப் போட்டியிலே வெற்றியீட்டியோரின் கவி வணக்கமும், விடுதலை நடனங்களும் இடம்பெற்று, நினைவுரைகள், சிறப்புரை என்பனவும் இடம்பெற்றது.
கவிதைப்போட்டியிலே வெற்றியீட்டியோருக்கான பரிசில்களும், தகமைச் சான்றிதழ்களும், கவிதைப் போட்டியிலே பங்குபற்றியோருக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. தமிழ் இளையோர்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள், விடுதலைக் கலைஞர்கள், பெருமளவு மக்களென உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வின் இறுதியில், தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற கோசப் பாடலோடு, உறுதியேற்று செவ்வனே நிறைவேறியது.












