ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடருமானால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் மட்டுமின்றி செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகளையும் முடக்கிவிடுவோம் என்று ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கட்டளையகமான காதம் அல்-அன்பியாதலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்காவின் இந்த முற்றுகை சட்டவிரோதமானது என்றும், இது தொடர்ந்தால் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகவே கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் செங்கடலை நேரடியாக எல்லையாக கொண்டிருக்கவில்லை என்றாலும், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போன்ற தனது பிராந்திய நட்பு சக்திகள் மூலம் அந்தப் பகுதியில் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு விட்டதாகவும், இதன் மூலம் வெறும் ஒன்றரை நாட்களில் ஈரானின் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை அறிவித்துள்ளது
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சில வணிகப் போக்குவரத்துகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், தற்போதைய முற்றுகை அந்த நீரிணைக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
