தாயகத்திலே யாழ்மாவட்டத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனிய தேசத்தின் கெசன் மாநிலத்திலே வாழ்ந்து, கடந்த 12.03.2026 அன்று, உடல்நலக் குறைவின் காரணமாகச் சாவினை அணைத்துக்கொண்ட வருமான, சின்னத்துரை சற்குணநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்றுள்ளார்.
தமிழ்த்தேசிய விடுதலை மீதான பற்றும், தமிழீழ தேசியத் தலைவர் மீதான பெரு நம்பிக்கையும் கொண்டு, அவர் ஆற்றிய மகத்தான வரலாற்றுப் பங்களிப்புக்களை வெளிப்படுத்தி, அனைத்துலகச் செயலக வழிகாட்டுதலில், யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால், இன்று (12.04.2026) மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பெற்றது.
குடும்பத்தினர்,உறவினர்கள்,செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென எல்லோரும் சூழ்ந்துவர, தமிழீழத் தேசியக்கொடி, நாட்டுப்பற்றாளரின் திருவுருவப்படம் என்பன நிகழ்வு மண்டபம் நோக்கிக் கையேந்தி வரப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பமானது.
பொதுச்சுடரினை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கெசன் மாநிலப் பொறுப்பாளர் வைரவநாதன் நிமலன் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் துணைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை, நாட்டுப்பற்றாளரின் துணைவியார் கிருபாநிதி சற்குணநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, திருவுருவப் படத்திற்கான மலர்மாலையினை, நாட்டுப்பற்றாளரின் சகோதரன் சின்னத்துரை புஸ்பநாதன் அணிவித்தார். தொடர்ந்து, மலர் சுடர் வணக்கத்தினை நாட்டுப்பற்றாளரின் புதல்வி ஜனனி சற்குணநாதன் ஆரம்பித்துவைக்க அவரைத் தொடர்ந்து, நாட்டுப்பற்றாளரின் ஏனைய பிள்ளைகளும், உடன் பிறந்தோரும் வணக்கம் செலுத்த, அவர்களைத் தொடர்ந்து கலந்துகொண்ட அனைவரும் மலர் சுடர் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைத்துலகச் செயலகத்தால் வழங்கப்பெற்ற மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பெற்றது.
இந்த நாட்டுப்பற்றாளருக்காக, இவரது உதவிகளைப் பெற்றுவாழும் தாயக மக்களால், தாயகத்திலே நிகழ்த்திய வணக்க நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்பும், தாயகவாழ் கலைஞர்களால் இவருக்காக உருவாக்கப்பெற்ற பாடலும் ஒலிபரப்பாக்கி, நாட்டுப்பற்றாளருக்கான மதிப்பளிப்பின் மூல ஆவணங்கள் யாவும் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்று, தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பெற்றது.
மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்விலே
பெருமளவிலான மக்கள், செயற்பாட்டாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.















