வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு தொன்மையான பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசம் விளங்குகின்றது. பண்டைய தமிழ் மன்னர்களின் தொன்மையான ஆட்சி மையமாகவும், வர்த்தக மையமாகவும் இது இருந்து வந்துள்ளது. அத்தோடு ஆரம்பகாலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மக்கள் தொகையினைக் கொண்ட பிரதேசசெயலர் பிரிவாகவும் பூநகரி இருந்தது. பூநகரிப் பிரதேசத்தில் பல மீனவர் குடியிருப்புக்களை உள்ளடக்கிய கிராமம் நாச்சிக்குடாக் கிராமம் ஆகும். 16.03.1996 அன்று அதிகாலை 5:20 மணியளவில் வான்படையின் பைற்றரென அழைக்கப்படும் எம்.ஐ. இருபத்துநான்கு ரக உலங்குவானூர்தி நாச்சிக்குடா அன்னை வேளாங்கன்னிப் பகுதியிலுள்ள மீனவர் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை நடாத்தியது. அவ்வேளை வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களென மொத்தமாக இருபது பேர் இத்தாக்குதலில் உயிரிழந்ததுடன், அறுபத்திரண்டு பேர் பலத்த காயங்களுக்கும் உள்ளானார்கள். நூற்றுக்கணக்கான மீனவக் குடிசைகள் எரிந்து சாம்பலாகின. சம்பவத்திற் காயப்பட்ட அனைவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் அடக்கம் செய்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள் இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்கின்றனர்;.
இச்சம்பவம் தொடர்பாக நாச்சிக்குடாவைச் சேர்ந்த ஜேசுதாசன் ஆன்மேரி தெரிவிக்கையில்:
“என்னுடைய சொந்த இடம் நவாந்துறை யாழ்ப்பாணம். தற்போது கடற்கரை வீதி நாச்சிக்குடாவில் வசித்து வருகின்றேன். 1996ம் ஆண்டு மூன்றாம் மாதம் பதினாறாம் திகதி விடியற்காலை நாங்கள் நித்திரையாக இருக்கும்போது திடீரெனக் கடற்கரையோரமாக வந்த எம்.ஐ-இருபத்துநான்கு ரக உலங்குவானூர்தி ஒன்று தாக்குதல் நடத்தியது. இதன்போது என்னசெய்வதென்று தெரியாத நிலையில் நாங்களனைவரும் சிதறி ஓடினோம். அதன்போது எங்களுடைய அண்ணையின் மகனுக்கும் மைத்துனரின் மகனுக்கும் காயம்பட்டது. எங்களுடைய உறவினர்கள் கை, காலை இழந்தனர். இச் சம்பவத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருபது பேர் சம்பவ இடத்திலும் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடல்வழியாக யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். விமானம் திரும்பவும் வருமோ என்ற பதற்றத்தின் மத்தியில் இறந்தவர்களை உறவினர்கள் அடக்கம் செய்தார்கள். அதன் பின்னர் நாங்கள் இடம்பெயர்ந்து போய் காடுகளில் வாழ்ந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு மேல் தொழிலுக்கு கடலுக்குப்
போகமுடியவில்லை. காட்டுக்குள் இருந்த நாங்கள் பின்னர் படிப்படியாக கடற்கரையில் குடியேறத் தொடங்கினோம். திடீரென ஒரு நாள் மாலை 5மணியளவில் இரணைமாதா நகர்ப் பக்கமாக இருந்து வந்த வானூர்தி எங்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் செய்வதறியாத நாங்கள் திரும்ப காடுகளுக்குள் ஓடினோம். நாம் தற்போதும் பயந்த நிலையிற் தான் கரையோரத்தில் இருக்கின்றோம்.


