பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026
தமிழின அழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் பெல்சியத்தில் உணர்வோடு முன்னெடுக்கப்பட்டது. தமிழின அழிப்பின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெல்சியம் கிளையின் ஏற்பாட்டில், பெல்சியம் நாட்டின் அன்வேர்ப்பன் (Antwerpen) மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
முதல் நிகழ்வாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெல்சியம் கிளையின் துணைப் பொறுப்பாளர் திரு. மா. அமலதாஸ் அவர்கள் ஏற்றினார்.
தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்புப் போரில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளையும் நினைவுகூர்ந்து, பொதுப் படத்திற்கான ஈகைச்சுடரைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெல்சியம் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. வேதநாயகம் ஜெயராஜா அவர்கள் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கமும் இடம்பெற்றன. முள்ளிவாய்க்காலில் நாம் அனுபவித்த வலிகளைச் சித்தரிக்கும் பதாதைகளின் கண்காட்சியுடன், பேச்சு மற்றும் கவிதை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நாம் அனுபவித்த கொடூரத்தை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் தெருவெளிநாடகம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக உறுதிமொழி எடுக்கப்பட்டு, எமது வலிகளைச் சுமந்த துண்டுப்பிரசுரங்களும் குடிநீர்ப் போத்தல்களும் வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்தளிக்கப்பட்டது. தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதியினை கோரும் முழக்கத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
















