யாழ்ப்பாணம், சாவற்கட்டு இறங்குதுறைமுகத்தின் அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கடற்றொழில் அமைச்சின் நிதிப் பங்களிப்பின் கீழ் நேற்று வியாழக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
சாவற்கட்டு இறங்குதுறைமுகம் நீண்டகாலமாக உரிய முறையில் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில், அப்பகுதி மீனவர்கள் தமது அன்றாட கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், குறிப்பாக, இறங்குதுறைமுகத்தை அண்மித்த கடற்கரைப் பகுதி பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் போதியளவில் காணப்படவில்லை.
இந்நிலையில், அப்பகுதி மீனவர்களின் நீண்டகாலத் தேவையை கருத்திற்கொண்டு, சாவற்கட்டு இறங்குதுறைமுகத்தை புனரமைத்து கடற்றொழில் நடவடிக்கைகளை பாதுகாப்பாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் அபிவிருத்திப் பணிகள் கடற்றொழில் அமைச்சின் நிதிப் பங்களிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் த கு. பிரபாகரமூர்த்தி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் பகுதி மீனவர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
