அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழல் சீராகும்போது, அந்நாட்டின் உச்ச தலைவரான மோஜ்தபா கமேனியை சந்திக்க திட்டம் இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ஈரான் தலைவர் மோஜ்தபா கமேனியின் ஈடுபாடு குறித்த கேள்விக்கு நிகழ்ச்சியில் பதில் அளித்த டிரம்ப், அமெரிக்கா உடனான பகையை முடித்துக்கொள்ள கமேனி முழு ஈடுபாடு காட்டுவதாகவும், மிகுந்த மரியாதை அவர் மீது வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
”ஈரான் தலைவராக அவரால் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் சிலவற்றிற்கு ஒப்புதல் அளிக்கிறார்” என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், நிபந்தனைகள் அமலுக்கு வருவதைப் பொருத்து, ஒருவேளை அனைத்தும் சுமூகமாக முடிந்தால், அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இத்துடன், ”ஈரானின் ராணுவப் படை தோற்கடிக்கப்பட்டதால், ஈரான் உடனான போரை பெரிய வெற்றியாகக் கருதுகிறோம். ஒப்பந்தங்களின்படி செயல்படவுள்ளோம். திட்டமிட்டபடி நேர்மறையாக நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வேறு வழியில் அதை செய்து முடிப்போம்” என அந்நிகழ்ச்சியில் ட்ரம்ப் தெரிவித்தார்.
