வவுனியா, ஆசிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஆலங்குளம் தனிநபர்களால், ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக ஆலங்குளம் பகுதியின் வரலாற்றினை முற்றிலும் அழித்து, அக்குளத்தினை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக ஆலங்குளத்தினை புனரமைப்பதற்காக கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், குறித்த அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்விடயத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், இக்குளங்களை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளும், கிராம மக்களும் எதிர்காலத்தில் மிக மோசமான வாழ்வாதாரப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபனிடம் கேட்டபோது,
இது தொடர்பாக தமக்கு கிராம மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும், இதனை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
