முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பிலான ஏற்பாடுகள் குறித்து நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
2026ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் மே18ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் இந்த அறிவிப்பை இன்று (17) வெளியிட்டுள்ளார்.
அதன்படி காலை 10.15இற்கு கொள்கைபிரகடனம் வாசிக்கப்பட்டு 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு தொடர்ந்து காலை 10.30இற்கு அகவணக்கம் செலுத்தப்படவுள்ளதுடன், காலை 10.31இற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்படவுள்ளது. பின்னர் காலை 10.35இற்கு மலரஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டுகளை போன்று, இவ்வாண்டும் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் தமிழர் தாயகத்திலும் உலகத் தமிழர் வாழும் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது ஆண்டு நினைவேந்தலில், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்தனர்.
