சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் , கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் வீட்டுக்கு சென்ற போது தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்ற போது, உடலில் வெட்டு காயங்களுடன் முதியவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அது தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு வழங்கப்பட்டதை அடுத்து நீதவான் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு விசாரணைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து, சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
