முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி (12) கிளிநொச்சியில் மாட்டத்தின் ஊடாக மக்கள் வணக்கத்திற்காகச் சென்றது.
2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் மனிதப் பேரவலத்தின் சாட்சியமாக இந்த ஊர்திப் பயணம் அமைந்துள்ளது.
கிளிநொச்சியை ஊர்தி சென்றடைந்தபோது, அப்பகுதி மக்கள் வீதிகளில் திரண்டு தீபமேற்றி, மலர் தூவி முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
2009 இறுதி யுத்த காலத்தில் மக்கள் எதிர்கொண்ட இடப்பெயர்வு, மருந்து மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஆகிய வலிகளைச் சுமந்தவாறு இந்த ஊர்தி தாயகம் எங்கும் பயணித்து வருகின்றது.
இந்த நினைவேந்தல் வாரத்தின் முக்கிய அங்கமாக, மக்களின் உயிர் காத்த உப்புக் கஞ்சியை நினைவுறுத்தும் கஞ்சிப் பகிர்வு நிகழ்வுகளும் தாயகத்தின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ். நல்லூரில் ஆரம்பமான இந்த ஊர்திப் பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
“வீழ்ந்த இடத்தில் தமிழினம் மீண்டு எழும்” என்ற நம்பிக்கையையும், எமது வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கடத்தும் கடப்பாட்டையும் இந்த நினைவேந்தல் ஊர்திப் பயணம் பறைசாற்றி நிற்கின்றது. இன்று முதல் மே 18 வரை இந்த ஊர்தி தாயகத்தின் பல்வேறு கிராமங்களையும் ஊடறுத்துத் தனது பயணத்தைத் தொடரவுள்ளது.





