தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார்.
ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார். ‘தராகி’ என்ற புனைபெயருடன் சிங்கள இனத்துவேசத்தைக் கக்கும் பத்திரிகை என வர்ணிக்கப்படும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையிலேயே அவர் பத்தி எழுத்தாளராக அறிமுகமானார்.
எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
மாமனிதர் ‘தராகி’ சிவராம் அவர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களாலும், துணைப்படைக் குழுக்களாலும் கொல்லப்பட்டு, தமிழீழ மண்ணிற்கும், மக்களிற்கும் அவரது சேவை இழக்கப்பட்ட நினைவுகள் காலத்துடன் நீள்கிறது.
2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் நாள் இரவு கடத்திச் செல்லப்பட்ட இவர், மறுநாள் கொல்லப்பட்ட நிலையில், கொழும்பு ஜயவர்தனபுர நாடாளுமன்ற உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து இவரது உடலம் மீட்கப்பட்டிருந்தது.
‘தராகி’ சிவராம் அவர்களுக்கு ‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் உயரிய விருதினை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழங்கியதில் இருந்து, தமிழீழத்திற்கும் தமிழீழ மக்களிற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணியினை எடைபோட முடியும்.
தமிழீழத்தின் தலைசிறந்த படைத்துறை ஆய்வாளரான இவர், அரசியல் ஆய்வாளராகவும், ஊடக அசிரியராகவும், ஊடகவியலாளராகவும்,இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த பேச்சாளராகவும் பல்வேறு பரிமானங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் பிறந்த இவரைப்பற்றியும் இவரது ஊடகப் பணிகள் தொடர்பாகவும், இவரது நண்பரான அமெரிக்காவின் சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மார்க் விற்றகெர் (Mark W}itaker)> “Learning Politics from Sivaram.” ஏன்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார்.
