மார்ச் 8, 2026
சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2026
ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் என்பதனால் முக்கியத்துவம் பெறுகின்றது.
வரலாறு
முதன் முதலில் 1789 ஆம் ஆண்டு சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
ஆணுக்கு நிகராக பெண்களும் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க தெருக்களிலும் உழைக்கும் பெண்கள் தமது உரிமைகளுக்காக கொதித்தெழுந்தனர். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
தமிழ் தேசமும் பெண்கள் எழுச்சியும்
தமிழ் தேசத்தின் உழைக்கும் பெண்கள் மட்டுமல்ல அனைத்துப் பெண்களும் ஸ்ரீலங்கா அரசின் இன ஒடுக்குமுறையினாலும், சமூகதிலுள்ள ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறைகள், சமய வேறுபாடுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், சீதனக் கொடுமை போன்ற ஒடுக்குமுறைகளாலும் கொடூரமாக பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகையிலிருந்த பகுதிகளில் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண் அடிமைத்தனம் என்பன மிகப் பெருமளவில் தடுக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு சரிசமமாக தேச கட்டுமானப் பணியில் ஈடுபடும் நிலை காணப்பட்டது. சுமார் இரண்டு தசாப்பதங்கள் தமிழ் தேசப் பெண்கள் வாழ்வில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் தேசத்தினதும் எழுச்சி மிகு பொற்காலமாக விளங்கியது.
இன்றய நிலையில் தமிழ் தேசத்திற்கான அரசியல் அங்கீகாரம் இல்லாது தமிழ்ப் பெண்கள் ஆணாதிக்கம் மற்றும் சாதிய, சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட ஸ்ரீலங்கா அரச இயந்திரம் ஒருபோதும் இடமளிக்காது என்பதும் உணரப்பட்டுள்ளது.
இன்று தமிழ் தேசத்தை தாங்கும் தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பன ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள தேசம் கருதுவதனாலும், இவ்வழிப்பை செய்து முடித்துவிடலாமென அவர்கள் நம்புவதனாலும் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்ந்தும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் மக்களின் இதுவரை காலப் போராட்டம் என்பது இவ் இன அழிப்பைத் தடுப்பதற்கான தற்காப்புப் போராட்டமேயாகும். தமிழ் மீனவர்களும், தமிழ் விவசாயிகளும், தமிழ் தொழிலாளர்களும் இவ் இன அழிப்பினால் மிகவும் துன்பப்படுகின்றனர்.
கடந்த கால யுத்தத்தினால் சுமார் தொண்ணூறாயிரத்திறகும் அதிகமான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளபோதும் அவர்களுக்கான நீதி இன்று வரை மறுக்கப்பட்டள்ளது.
ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் கைது செய்யப்பட்டும், கடத்தபட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரும், கையளிக்கப்பட்ட பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளதும் உறவினர்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வீதிகளில் இருந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடுபவர்களில் 99 வீதமானோர் பெண்களாகவே உள்ளனர். இவர்களுக்கான நீதியும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.
யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கான நீதி மறுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்ட ருவண்டாவுக்கான சிறப்பு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பானது திட்டமிட்ட வகையில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வல்லுறவு (Rape) மற்றும் (sexual abuse) குற்றங்கள் இனப்படுகொலையாக கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றது.
யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்து கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக்கு இன்று வரை ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறவில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் இன்று வரை முழுமையாக மீளக் குடியமர அனுமதிக்கப்படாமையினாலும், கடற்தொழிலில் அரச ஆதரவுடன் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளாலும் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களது அத்துமீறிய சட்டவிரோதமான நடவடிக்கைகளாலும் தமிழ்த் தேசக் கடலில் தமிழர்களது மீன்பிடித் தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்படி அனைத்து சூழ்நிலையிகளாலும் தமிழ் பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு நடாத்தும் இந்த மார்ச் 08 பெண்கள் எழுச்சி நிகழ்வில்: தமிழ்த் தேசத்தின் மீதான இனப்படுகொலைக்கு நீதி, தமிழ் தேசத்தின் அரசியல் அங்கீகாரம், தமிழ் தேசப் பெண்கள் ஒடுக்கு முறைகளில் இருந்து விடுபட வலுச்சேர்த்தல் என்பதனை அடிப்படையாகக் கொண்டு:
இன்று 2026 மார்ச் 08 கிட்டு பூங்காவில் இடம்பெறும் சர்வதேச பெண்கள் எழுச்சி நிகழ்வில் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிகின்றோம்.
1) இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கைத் தீவின் இணைந்த வடக்கு கிழக்கு தாயகம், தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி (கநனநசயட உழளெவவைரவழைn) முறைமை உருவாக்கப்படுவதற்காக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறானதொரு சமஸ்டி ஆட்சி முறைமைக்கு சிறிலங்காவின் அரசியல் அமைப்பு முறைமை மாற்றப்படாதவரை தமிழ்த் தேசத்துடைய தனித்துவத்தையும் அடையாளத்தையும் ஒற்றையாட்சி முறைக்குள் பாதுகாக்க முடியாது என்பதே வரலாற்று அனுபவமாகும். அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்னும் போர்வையில் கடந்த 2015-2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியல் யாப்பு வரைபை இறுதிப்படுததி நிறைவேற்றப்போவதாக தற்போதய அனுரகுமார அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அந்த வரையானது ஓர் ஒற்றையாட்சி என்பதனால் அதனையும் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவடிவிலானதொரு தீர்வு முன்மொழிவையும் முற்றாக நிராகரிக்கின்றோம். தமிழ் மக்களும் அதனை முற்றாக நிராகரிக்க வேண்டுமெனவும் கோருகின்றோம். மேற்குறிப்பிட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ வரைபை கொண்டுவந்து பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்கு அனுரகுமார அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க இலங்கை அரசு மீது சர்சதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் கோருகின்றோம்.
2) ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த 17 ஆண்டுகளாக ஸ்ரீலங்கா அரச ஆதரவுடன் குறிப்பாக பௌத்த சாசன அமைச்சு, தொல்லியல் திணைக்களம், வனவளத்திணைக்களம், மற்றும் வன பரிபாலனத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு உட்பட அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், கலாசார அழிப்புக்கள், அபிவிருத்தி என்னும் போர்வையில் இடம்பெறும் சிங்கள பௌத்த மயமாக்கல்கள் உள்ளிட்ட கட்டமை;ப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தடுக்கவும் எமது தேசததையும் மக்களையும் பாதுகாக்கவும் தொடர்ந்து செயற்படுவோம்.
3) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்,
தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு குற்றங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி கிடைக்கவும்,
தமிழர் தேசத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தமிழ்ப் பெண்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வல்லுறவு (rape) மற்றும் பாலியல்; துஷ்பிரயோக (sexual abuse) குற்றங்களுக்கு நீதி கிடைக்கவும்,
ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் பக்கச் சார்பற்ற சர்வதேச குற்றவியல் நீதிவிசாiணை முன்னெடுக்கப்படல் வேண்டும் எனக் கோருகின்றோம்.
அதற்கு மாறாக பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முடக்கப்பட்டிருப்பதன் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கு கால அவகாசத்தை வழங்குவதானது தமிழ் மக்களுக்கான நீதியை மறுப்பதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக் கண்டறிவதற்கான வாய்ப்பையும் மறுப்பதாகவும் அமையும் என்பதனையம் சுட்டிக்காட்டுகின்றோம்.
4) கடந்த காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசு உறுதியளித்தவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அச்சட்டத்தின் கீழ் இன்று வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம். பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்னும் போர்வையில் புதிதாகக் கொண்டுவர முயலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் முற்றாக எதிர்க்கின்றோம்.
5) வடக்கு கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்பிரதேசத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியை கையாள்வதற்கான ஓர் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான நிதி நேரடியாக கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.
6) போரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சிறுவர்களின் கல்வி பொருளாதாரம் மற்றும் அவர்களின் உடல் உளநலன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுபதில் எமது அரசியல் இயக்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும்.
7) தமிழ் பெண்கள் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை பாதுகாப்பாகவும், முழுமையாகவும் அனுபவிப்பதில் இராணுவ மயமாக்கல் தடையாக உள்ளதுடன், தமிழர் தாயகத்தின் மீது இன அழிப்பை மேற்கொண்டு, தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள் முற்றாக வெளியேற வேண்டுமென குரல் கொடுப்போம்.
8) சமூக பண்பாட்டு ஒடுக்குமுறைகளிலிருந்து பெண்களை விடுவிக்க பாடுபடுதல். எமது சமூகத்தில் பெண்கள் 52 வீதமாக உள்ளனர். எனினும் அவர்கள் சமூக பண்பாட்டு ரீதியாகவும், இன ஒடுக்கு முறையாலும் ஒடுக்கப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை சீதன கொடுமை , பாதுகாப்பின்மை , பாரபட்சம் போன்ற பல்வேறு வகையில் ஒடுக்கப்படுகின்றனர், இவ்வாறனான நிலைமைகளை கண்டறிந்து தீர்க்கக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிப்போம்.
9) எமது அரசியல் இயக்கத்தின் நிர்வாக கட்டமைப்புக்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடுகளை உயர்த்துவதனை இலக்காகக் கொண்டு தொடர்ந்தும் அற்பணிப்புடன் செயற்படுதல்.
10) தமிழ் தேசத்தில் பெண்களின் பால்நிலை சமத்துவத்தினை பாதுகாத்துப் பேணும் வகையிலான சட்டங்களை உருவாக்க செயலாற்றுவோம்.
11) எமது அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள் சமூகத்தில் பெண்கள் சிறுமிகளின் உரிமைகளையும் கௌரவத்தையும் பேணிப்பாதுகாத்து செயற்படுபவர்களாக இருத்தல் வேண்டும். பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளில் எமது அமைப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்வதில் எமது அமைப்பு உறுதியாகச் செயற்படும் என்பதுடன் பெண்கள் சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இயங்குவதற்காக உழைத்தல்,
12) கடந்த 2009 இல் ஆயுத யுத்தம் இனவழிப்பு மூலம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழத் தேசத்து இளைஞர் யுவதிகளை குறிவைத்து அவர்களை போதை பயன்பாட்டிற்கு அடிமையாக்கும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்தும் செயற்படுவோம். அத்துடன் போதைக்கும் வன்முறைக்கும் அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும் அவர்களை சமூக மயப்படுத்தவும் தொடர்ந்தும் செயற்படுவோம்.
13) எமது தேசத்தில் 18 வயதிற்குக் குறைந்த இளவயது திருமணங்களை நடைமுறையிலிருந்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.
இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த எமது இயக்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் எனவும் உறுதி கூறுகின்றோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மார்ச் 08, 2026
கிட்டு பூங்கா, நல்லூர், யாழ்ப்பாணம்.












