கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம்(14), வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர், கொலன்னாவாவைச் சேர்ந்த 38 வயதான ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்படி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, சந்தேக நபர் சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாக பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டாளர்களுக்கு 100,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மல்லாகம் காவல்நிலையத்திலும் சந்தேக நபருக்கு எதிராகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
