பராமரிப்புச் செலவுத் தொகையை வழங்கத் தவறியதால் 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது (Null and void) என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முஹம்மது அமீன் முஹம்மது நசீம் என்பவர் 1.74 மில்லியன் ரூபாய் பராமரிப்பு நிலுவைத் தொகையை வழங்கத் தவறியதால் காசி நீதிமன்ற உத்தரவின்படி 2024 ஜூலையில் சிறையிலடைக்கப்பட்டார்.
எனினும், செப்டம்பர் 2024 இல் சிறைவாசிகள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர் 2 மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே விடுவிக்கப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்குள் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவரது முன்னாள் மனைவியான அஹமண்ட் ஜலீல் பர்மீலா பேகம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், குறித்த நபருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பானது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரே மாதிரியான குற்றத்திற்காகச் சிறையிலிருந்த மற்றொரு கைதிக்கு வழங்கவேண்டிய பொது மன்னிப்பை ஒரு வாரம் மட்டுமே தண்டனை பெற்றிருந்த நசீமுக்கு தவறாக வழங்கப்பட்டமையை கண்டறிந்த நீதிமன்றம், இந்த பொதுமன்னிப்பை ரத்துச்செய்துள்ளது
அத்துடன், அவரது பழைய சிறைத்தண்டனைத் தீர்ப்பு மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.
தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் விடுவிக்கப்பட்ட நசீம், தற்போது சட்டத்தின் பார்வையில் நீதியிலிருந்து தப்பி ஓடியவர் எனக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், அவர் உடனடியாக சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அசல் பிடியாணை செல்லுபடியாகும் என்றும் மற்றும் அவரை மீண்டும் கைது செய்ய அதுவே போதுமானது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ரணில் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து…! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பயணிகள் கைது
- மன்னாரில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்!
- பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
- சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
