வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடமாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இடமாற்றங்கள் வருடாந்த இடமாற்றம், சேவையின் அவசிய தேவை (Exigencies of service), ஒழுக்காற்று நடவடிக்கை ஆகிய தருணங்களிலேயே மேற்கொள்ள முடியும்
சேவையின் அவசிய தேவை (Exigencies of service) கருதிய இடமாற்றமானது ஒரு ஆசிரியரது தேவை மிக அவசரமாகத் தேவையடுமிடத்தில், குறித்த ஆசிரியரது சேவையே குறித்த பாடசாலைக்குத் தேவைப்படுமிடத்து, ஓரு ஆசிரியரை குறித்த நிலையத்தில் வைத்திருப்பதால் அவரால் பிரச்சினை வளர்கிறது ஆகிய மூன்று சந்தர்பங்களிலேயே மேற்கொள்ளப்பட முடியும்
ஆனாலும் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளால் ஆசிரியர் தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடலோ, அச்சங்கங்களின் பங்களிப்புகளோ இன்றி, பெருந்தொகை ஆசிரியர்களுக்கு வடமாகாண கல்வி அதிகாரிகளால் ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றம்’ என்ற அடிப்படையில் 193 ஆசிரியர்களுக்கு ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் III பிரிவு 3.3 இன் பிரகாரம் “இடமாற்றத்தக்க 25 அல்லது அதனிலும் கூடிய தொகையினரைக் கொண்ட பணியாளர்கள் உள்ள ஒவ்வொரு திணைக்களத்திலும் இடமாற்றச்சபை ஒன்றோ அதற்கு மேற்பட்டனவோ நிறுவப்படவேண்டும்” என்று 2013.07.03ம் திகதிய 1817/30 ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் 188 வது பிரிவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2310/29 ம் இலக்க 2022.12.14 ம் திகதிய அதிவிசேட வர்த்தமானியின் பிரிவு 259 இல் “அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சேவையின் அவசர தேவைகளின் பெயரில் இடமாற்றம் செய்யப்படும் முன்னர் தத்துவங்கள் கையளிக்கப்பெற்ற அதிகாரி அல்லது நியமிப்பு செய்யும் அதிகாரி அத்தகைய தேவையொன்று பிரிவு 258 இல் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க, உண்மையிலேயே எழுந்துள்ளது எனவும், அந்த இடமாற்றம் அடுத்த வருடாந்த இடமாற்றங்கள் செய்யப்படும் வரையில் பிற்போடமுடியாதெனவும் தனிப்பட்ட முறையில் திருப்தியுறுதல் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
