முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று 26.10.2026 அன்று காலை 07.00 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள கடற்றொழிலாளர்கள் மூவரையும் தேடித் தருமாறு உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
காணாமல்போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புபடை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உரிய தரப்புக்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன கடற்றொழிலாளர்களைத் தேடுவதற்கு நடவடிக்கைகள் உரியதரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா என்பது தமக்கு தெரியாது என்றும் கடற்படை மற்றும் விமானப்படை மூலமாக அவர்களை தேடி தருமாறு உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
புதுமாத்தளன் பகுதியிலிருந்து மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று 26ஆம் திகதி காலை MLT/1742 என்னும் இலக்கப் படகில் தூண்டல் தொழிலுக்காக கடலுக்குச் சென்றநிலையில் 27 ம் திகதி மாலை வரை கரைதிரும்பவில்லை.
புதுமாத்தளன் பகுதியைச்சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஸ்ரீபுஸ்பராசா, மன்னாரைச் சேர்ந்த முகம்மட் ரிஸ்வான் ஆகியோரே தொழிலுக்கு சென்று இதுவரை கரைதிரும்பவில்லை.
தற்போது கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதால் காணாமல்போன கடற்றொழிலாளர்களைத் தேடி ஏனைய கடற்றொழிலாளர்களும் செல்வது பாதுகாப்பாக இருக்காதென அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்
எனவே இவர்களை கடற்படை மற்றும் விமானப்படை மூலமாக தேடி தருமாறு உறவுகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
