தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நியூசிலாந்தில் 26.09.2026 அன்று உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தனது உயிரையே அர்ப்பணித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவையும் தியாகத்தையும் நெஞ்சில் ஏந்தியவாறு, பெருமளவான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
பொதுச்சுடரை தேசிய ஆதரவாளர்களில் ஒருவரான ரூபன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மாவீரர் பொதுப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் குரியகுமார் அவர்கள் முன்னெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறை பொறுப்பாளர் கேசவன் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர் லெப் கேணல் சித்தார்த்தனின் சகோதரி கந்தசாமி செல்வந்தரி ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றும் நிகழ்வை மாவீரர் செஞ்சுடரின் சகோதரி தவலோயினி முன்னெடுத்தார்.
இதனையடுத்து அக வணக்கம் இடம்பெற்றதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் அமைதியான முறையில் மலர் வணக்கம் செலுத்தினர்.
தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுகளை நெஞ்சில் மீட்டெடுக்கும் வகையில் நினைவுரைகள், பாடல்கள் மற்றும் கவிதை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது, அவர்களுடன் தொடர்புடைய நினைவுகளும், அவர்களின் வாழ்க்கை, தியாகம் மற்றும் பங்களிப்புகள் தொடர்பான கருத்துகளும் பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் தியாகத்தின் அடையாளமாக நினைவுகூரப்படும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு, காலங்கள் கடந்தாலும் தமிழர் மனங்களில் நீங்காததாகவே நிலைத்திருக்கின்றது என்ற உணர்வுடன் நிகழ்வு நிறைவுநோக்கிப் பயணித்தது.
தொடர்ந்து, தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகள் ஊடாக இளைய தலைமுறையினரிடையே தியாகத்தின் வரலாறும், நினைவேந்தலின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு, மலர் வணக்கம் செலுத்தியதுடன், நினைவேந்தல் நிகழ்விற்கு தமது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கினர். பங்கேற்ற அனைவரும் அமைதியான முறையில் நினைவேந்தலில் இணைந்து, தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் உள்ளிட்ட தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தினர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் தியாகத்தின் அடையாளமாக நினைவுகூரப்படும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு, காலங்கள் கடந்தாலும் தமிழர் மனங்களில் நீங்காததாகவே நிலைத்திருக்கும் என்ற உணர்வுடன் நிகழ்வு நிறைவுநோக்கிப் பயணித்தது.
நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்தன.
இறுதியாக, “நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்” என்ற பாடலுடன் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நிறைவடைந்தது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நியூசிலாந்து

















