யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம் இடம்பெறுவதாக பல்கலை மாணவர்கள் விடுத்த அறிவிப்பை அடுத்து யாழ்.பல்கலை முன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பல்கலை மாணவர்களுடன் வேலன் சுவாமிகளும் கலந்துகொண்டுள்ளார்.
தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் இடம்பெறவுள்ள இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் பல்கலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்
அதேவேளை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவ்விடத்திற்கு முச்சக்கர வண்டியில் வருகை தந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு சென்றனர் .
ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியாது
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியாது எனவும், ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு அனுமதி பெற வேண்டுமெனவும், அதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு அனுமதி அவசியமா என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியதுடன், அனுமதி பெற வேண்டுமெனில் உடனடியாக வழங்க முடியுமா எனவும் கேட்டுள்ளனர்.
எனினும், பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பு அதிகாரியுடன் கலந்துரையாடுமாறு பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியதால் இருதரப்புக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
