பதுளை, எல்ல பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற 26 வயதுடைய நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று 24ஆம் திகதி மதிய வேளையில் இடம்பெற்றதாக எல்ல சுற்றுலா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு வெளிநாட்டு யுவதிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிரதேச மக்களின் உதவியுடன் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் சடலம் மீட்கப்பட்டு, 1990 சுவசெரிய அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எல்ல பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் மழை நிலைமைகளை கருத்தில் கொண்டு, நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட ஆபத்தான சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
