கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய, படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஹமங்கட பகுதியில் மா ஓயாவில் நேற்று (19) நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
படல்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரும் பிரதேச வாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 25 வயதுடைய செல்வகுமார் தினேஷ்குமார், ஹப்புத்தளை – ஓஹிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும், 28 வயதுடைய சுப்பிரமணியம் திருச் செவ்வி, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை மாவட்டத்தின் தெமோதரை – உடுவரை தோட்டம் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் சுதர்சனி (20) மற்றும் நாகராஜா நிசாந்தனி (19) ஆகிய இரு இளம் பெண்களும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரும் படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கோழி இறைச்சி பொதி செய்யும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், இறுதிக் கிரியைகளுக்காக பதுளைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தெரிவித்துள்ளனர்.



