சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைவு.
செல்லுபடியாகும் விசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்வாய்ப்புகளுக்காக குவைத்திற்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களிலிருந்து விலகி, வேறு இடங்களில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத் நகரிலிருந்து புறப்பட்ட ஜசீரா ஏர்வேஸ் விமானம் J9-551 மூலம் அதிகாலை 3.10 மணியளவில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
தாயகம் திரும்பிய இலங்கையர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு உதவும் வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவியையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
