வட தமிழீழம் , செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்குமான அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று(13/09/2026) மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
1000க்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றுள்ள இப்பேரணியில், செம்மணி சித்துப்பாத்தியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் உறவுகளுக்கான நீதியை நிலைநாட்ட சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சான்றுப் பொருட்களை பாதுகாப்பதுடன், சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் மாதத்தில் இடம்பெறும் இப்பேரணி, தமிழர்களின் நீதிக்கான மக்கள் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்று வருகிறது.
தமிழ்த் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுக்கும் இப்பேரணியில் குடிசார் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர், தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைலாசபிள்ளையார் கோவில் முன்றலில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான பேரணி, கோவில் வீதி ஊடாக முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) நோக்கி முன்னெடுக்கப்பட்டது
பேரணியின் நிறைவில் கிட்டு பூங்காவில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது
“செம்மணியில் புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சர்வதேச விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையுடன் மக்கள் திரண்டு, நீதிக்கான தமது குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.














