யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரை வளாகத்திற்கு நேரில் சென்று அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் தொன்மையான சமய, கலாசார மரபுகளையும் அவற்றுடன் தொடர்புடைய தொல்பொருள் பாரம்பரியங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்ற அடிப்படையில் இந்த விஜயம் அமைந்திருந்தது.
கந்தரோடை விகாரை வளாகத்தில் உள்ள புராதன தொல்பொருள் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றின் வரலாற்று மற்றும் கலாசாரப் பெறுமதியை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தீவிர கவனம் செலுத்தினார். புராதன சின்னங்களின் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அங்கு சமய வழிபாட்டு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த ஆய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சேனரத் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
