திருகோணமலை இனக்கலவரம் – 12 ஏப்பிரல் 2006
திருகோணமலை மாவட்டம் 1980களிலிருந்து தமிழருக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடரும் கொதிப்பான ஒரு இடமாக இருந்து வந்திருக்கின்றது. இவ்வன்முறைகள் ஊடாக இம்மாவட்டதிதில் செறிவாக வாழ்ந்து வந்த தமிழர் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விரட்டப்பட்டனர். சிறீலங்கா அரசால் வெளியிடப்பட்ட தீவின் மக்கள் பரவல் சார்ந்த புள்ளிவிபரங்கள் இதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
இதே போல் 2006 ஏப்பிரல் 12ஆம் நாள் மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து தமிழர்களுக்கு எதிராக சிங்களக் காடையர்களின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன்போது 10 தமிழ்மக்கள் உட்பட 15பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 50பேர் படுகாயமடைந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் காயப்படுத்தப்பட்டதுடன் பெருமளவு வீடுகள், கடைகள், வாகனங்கள் எரித்து அழிக்கப்பட்டன.
1983, 1987ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் திருகோணமலை நகரில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகமோசமான வன்முறையாக இது கருதப்படுகின்றது. 2006 ஏப்பிரல் 12ஆம் நாள் மாலை 4மணியளவில் திருகோணமலை நகரிலுள்ள மரக்கறிச் சந்தைப் பகுதியிலுள்ள தேங்காய்க் கடைக்கு முன்பாக குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் ஐந்து சிங்களவரும் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்னரே மூன்று லொறிகளில் சிங்களக்காடையர்கள் திருகோணமலை நகரக்குள் கொண்டு வரப்பட்டதை தமிழர்கள் கண்டனர். இச்சிங்கள காடையர்கள் தமிழருக்குச் சொந்தமான கடைகளை கொள்ளையடித்தபின் இக்கடைகளுக்கு தீயூட்டினர். இதனால் திருகோணமலை நகரிலிருந்து பெரிய புகைமூட்டம் எழுவதைக் காணக்கூடியதாக இருந்தது. விரைவில் தமிழர் மேலான தாக்குதல்கள் ஆரம்பித்தது.
இத்தாக்குதல்களுக்கு துவக்குகளும் கத்திகளும் உபயோகப்படுத்தப்பட்டன. ஏப்பிரல் மாதப் புதுவருடக் கொண்டாட்டத்திற்காக பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு நகருக்கு சென்றிருந்த பல தமிழர் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
வன்முறைகள் நடைபெறுவதை அங்கு நிலைகொண்டிருந்த பல இலங்கை இராணுவத்தினர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
- சுதுபண்டா, 39
- அந்தோனிராஜ் கீதநடனி, 33
- சந்திரா மத்துவஸ், 50
- கசுன் சமந்தா, 23
- கந்தசாமி திரவியன், 56
- அசங்கா மிலான், 21
- சுசந்தா, 20
- ரில்வான், 36
- செல்வராஜா, 44
- மயூரா பெதிகே சிவமணி, 30
- பரூக், 55
- ராச்மி டிலராங்கி, 08
