செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறித்த புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கக் கோரி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 583 மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், உரிய ஆய்வுகள், மரபணுப் பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், குறித்த இடத்தை மனிதப் புதைகுழி என அறிக்கையில் குறிப்பிடாததையும் அவர்கள் விமர்சித்து, அந்த அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகளைக் கண்டறிய சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச கண்காணிப்பின் கீழ் மரபணுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்படும் மரபணு மாதிரிகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையும் நீதியும் கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்த உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகள், இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

1 thought on “செம்மணி புதைகுழி : நவம்பர் 16இல் போராட்டம்”
Comments are closed.