கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட 7 ஆம் கட்டை பகுதி இன்று (22) இரவு 10 மணி முதல் நாளை (23) அதிகாலை 2 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கரும்புலி லெப். கேணல் இளங்கோ உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கடந்த 19 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்துடன் தொடர்புடைய ‘பிரைம்மூவர்’ இழுவை வாகனத்தை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினாலேயே வீதி இவ்வாறு மூடப்படவுள்ளது.
எனவே, குறித்த காலப்பகுதியில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கமைய, கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் கட்டுகஸ்தோட்ட, மடவள, வத்தேகம, உகுவலை மற்றும் எல்வள ஊடாகப் பயணித்து மீண்டும் A9 வீதியை அடைய முடியும்.
அதேபோன்று, மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் கனரக வாகனங்கள் எல்வள, உகுவலை, வத்தேகம, மடவள மற்றும் கட்டுகஸ்தோட்ட ஊடாகப் பயணிக்க வேண்டும்.
மேலும், இலகுரக வாகனங்கள் அலவத்துகொட, ஓவிஸ்ஸ, பூஜாபிட்டிய மற்றும் அம்பதென்ன ஊடாக கட்டுகஸ்தோட்டவைச் சென்றடைந்து அங்கிருந்து கண்டி திசையை நோக்கிப் பயணிக்க முடியும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்ளும் வகையில், குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
