இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளில் சுமார் 90 சதவீதமானவை அகற்றப்பட்டுவிட்டதாகவும், இதனூடாக பெரும்பகுதி நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டிருப்பதாகவும் ‘தி ஹலோ ட்ரஸ்ட்’ அமைப்பின் இந்தோ-பசுபிக் பிராந்திய இயக்குநர் ஸ்டீபன் ஹோல் தெரிவித்துள்ளார்.
கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் ‘தி ஹலோ ட்ரஸ்ட்’ அமைப்பின் இந்தோ-பசுபிக் பிராந்திய இயக்குநர் ஸ்டீபன் ஹோலுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை (08) கனேடிய தமிழ் காங்கிரஸின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2002 ஆம் ஆண்டு முதல் ‘தி ஹலோ ட்ரஸ்ட்’ முன்னெடுத்துவரும் கண்ணிவெடி அகற்றல் பணிகள் குறித்து கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுக்கு ஸ்டீபன் ஹோல் விளக்கமளித்தார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளில் சுமார் 90 சதவீதமானவை அகற்றப்பட்டுவிட்டதாகவும், இதனூடாக பெரும்பகுதி நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
அதேவேளை இந்தக் கண்ணிவெடி அகற்றல் பணியை மேற்கொள்வதற்காக தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு ‘தி ஹலோ ட்ரஸ்ட்’ அமைப்பு முறையாகப் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு வழங்கியுள்ளமையை நினைவுகூர்ந்த அவர், இன்னமும் அகற்றப்படாமல் இருக்கும் கண்ணிவெடிகள் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் அகற்றப்படும் என எதிர்வுகூறினார்.
மேலும் தமது அமைப்பு முன்னெடுத்துவரும் கண்ணிவெடி அகற்றல் பணிக்கு ஆதரவளித்துவரும் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவித்த ஸ்டீபன் ஹோல், இலங்கையில் இப்பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்கு கனடா மற்றும் ஏனைய பங்காளிகளிடமிருந்து தொடர் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
அதனை அங்கீகரித்த கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், ‘தி ஹலோ ட்ரஸ்ட்’ அமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றல் பணிகளைப் பாராட்டினர்.
- ரணில் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து…! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பயணிகள் கைது
- மன்னாரில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்!
- பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
- சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
